மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய தொடர்ந்து இழுபறி நிலவிவருகிறது. சிவேசனா கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பா.ஜ. தலைவர்கள், கவர்னரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை, மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவார் உள்ளிட்டோர் சந்தித்து பேச உள்ளனர். சட்டசபை தலைவராகவும், முதல்வர் ஆகவும் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த சிவசேனா அமைச்சர்கள் 15 பேர், புதன்கிழமை ( நவம்பர் 6ம் தேதி) முதல்வர் பட்னாவிஸை சந்தித்து, காலம் தவறிய மழைப்பொழிவால், விவசாயிகள் அடைந்த பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினர்.
ஆட்சியில் 50 – 50 பங்கு
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவீத பங்கு வேண்டும் என்ற வேண்டுகோள் உடன் தான் சிவசேனா கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. சிவசேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சிவசேனா கட்சியின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆனால், பா.ஜ., கட்சியோ முதல்வர் பதவி எங்களுக்கே என்பதில் பிடிவாதமாக உள்ளது. இதற்கு சிவசேனா கட்சி உடன்படுவதாக இல்லை. முதல்வர் பதவி, தாங்கள் சொல்லும் நபருக்கே அளிக்கப்பட் வேண்டும் என்பதில் சிவசேனா கட்சி, உறுதியாக உள்ளது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, செய்துகொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். கூட்டணி ஏற்படுவதற்கு காரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், மேற்கொண்டு பேசுவோம், இல்லையேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை . எதிர்க்கட்சியில் அமரக்கூட சிவசேனா கட்சி தயாராகிவிட்டது. தலைவர் உத்தவ் தாக்ரேவின் உத்தரவுக்கு காத்திருப்பதாக சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பா.ஜ. கட்சி, சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க துணிந்துவிட்டது.
விரைவில் நல்ல செய்தி – பா.ஜ. : இன்னும் 48மணிநேரத்தில் மகாராஷ்டிரா அரசியலில் நல்ல நிகழ்வு நடைபெற உள்ளது. 105 எம்எல்ஏக்களை பெற்றுள்ள கட்சி, ஆட்சி அமைக்க கவர்னரை சந்திப்பது என்பது வழக்கமான நிகழ்வு தான். சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதில் பா.ஜ. கட்சி அதே உறுதியுடன் தான் உள்ளது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவார் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சி சட்டசபை தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவரகள், தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தபின்பே, பா.ஜ. கட்சி, தனியாக கவர்னரை சந்தித்து பேச திட்டமிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ. எதிர் கேள்வி : சட்டசபை தேர்தலில், பா.ஜ. கட்சி 164 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், சிவசேனா கட்சியோ 121 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது அவ்வாறிருக்க அக்கட்சி எவ்வாறு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவீத பங்கை கேட்கமுடியும் என்று பா.ஜ. தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சிவசேனா கட்சி 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. BMC தேர்தலில், தலைவர் பதவியை அக்கட்சிக்கு தர பா.ஜ., தயாராக உள்ளது.37 ஆயிரம் கோடி மதிப்பிலான பிஎம்சி அமைப்பில் பா.ஜ., வுக்கு 82 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், சிவசேனாவுக்கோ 2 பேர் மட்டுமே உள்ளனர்.
அதுமட்டுமல்லாது, பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர் பதவிகளையும் தர பா.ஜ.க தயாராக உள்ளதாக பா.ஜ தலைவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 9ம் தேதியுடன் அங்கு சட்டசபை காலம் நிறைவு பெற உள்ளதால், அதற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும். பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் 15 நாட்களுக்கு காபந்து அரசு அமல்படுத்தப்பட்டு புதிய அரசு ஏற்பட வழிவகுக்கப்படும்.
தங்கள் கட்சி, பெரும்பான்மையை நிரூபித்து விரைவில் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கும் என்று பா.ஜ. தலைவர்களில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.