லக்ஷ்மன் சிங், கட்டுரையாளர்
Maharashtra elections: BJP-Sena target Dharavi: 2014 ஆம் ஆண்டு மோடி அலை வீசியபோது காங்கிரஸ் கட்சி - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்த பல பெரிய தலைகள் தங்கள் சட்டசபை இடங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுப்போனார்கள். ஆனால், மும்பையின் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸை தோற்கடிக்க முடியவில்லை. அதில் ஒன்றுதான் தாராவி தொகுதி.
ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்ற பெயருக்கு சொந்தமான தாராவி 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. அது இந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் போட்டிக்கு உள்ளாகியுள்ளது.
2.40 சதுர கி.மீ பரப்பளவில் 60,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பரந்த தாராவி சேரி மும்பையின் மையப்பகுதியில் பிரதான இடத்தில் அமைந்துள்ளது. 1980-இல் இருந்து தாராவியில் நடந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 1995-இல் மட்டும் சிவசேனா வெற்றி பெற்றது.
இது பட்டியல் சாதி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி. இது 2014 ஆம் ஆண்டு காவி அலைக்கு எதிராக இருந்தது. அந்த தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்து போட்டியிட்ட நிலையில், இரு கட்சிகளின் மொத்த வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் மூன்று முறை எம்.எல்.வான வர்ஷா கெய்க்வாட்டைவிட 6000 வாக்குகள் முன்னணியில் இருந்தன. அதனால், இந்த தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் தாராவி சட்டமன்றத் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உறுதியான ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர்.
தற்போது மும்பை காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் வர்ஷா கெய்க்வாட் அவருடைய இடத்தை பாதுகாக்க கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவசேனா - பாஜக கூட்டணி சிவசேனாவின் ஆஷிஷ் மோரை தங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
தாராவி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் வெற்றிக்கான முக்கிய வாக்கு வங்கிகளாக தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
2014-இல் மோடி அலை வீசியபோது காங்கிரஸ் கட்சி - தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பல பெரும் தலைகள் தங்கள் சட்டமன்றத் தொகுதி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாம தோல்வியடைந்த நிலையில் மும்பையில் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்க முடியவில்லை. அதில் ஒன்றுதான் தாராவி. இருப்பினும், இது சிவசேனாவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டதால் இது நடந்திருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின்படி, சிவசேனாவின் பாபுராவ் மானே 32,390 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும் பாஜக வேட்பாளர் திவ்யா தோலே 20,763 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்ததைக் காட்டுகின்றன. சிவசேனா - பாஜக இருவரும் கூட்டாக 53,153 வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது முன்னணியில் இருந்த கெய்க்வாட்டின் வாக்குகளைவிட 6,000 வாக்குகள் அதிகம். வர்ஷா கெய்க்வாட் 47,718 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தாராவி அமைந்துள்ள மும்பை தென் மத்திய மக்களவைத் தொகுதியில் சிவசேனாவின் ராகுல் ஷெவாலே வென்றதால் காவி கூட்டணி தைரியமாக உள்ளது.
இந்த முறை தாராவி மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களிப்பார்கள் என்று தாராவியைச் சேர்ந்த சிவசேனா கட்சி ஊழியர் ஒருவர் கூறினார். “இது 15 ஆண்டுகளாகிவிட்டது. தாராவி மக்கள் வாரிசு அரசியலில் சோர்வாக உள்ளனர். மக்கள் தந்தை (ஏக்நாத் கெய்க்வாட்) மற்றும் மகள் (வர்ஷா கெய்க்வாட்) ஆகியோருடன் சோர்ந்து போயிருக்கிறார்கள். அண்மையில் நடந்த தேர்தலில் தென் மத்திய மக்களவைத் தொகுதியில் இருந்து சிவசேனா எம்.பி. ராகுல் ஷெவாலே வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸை நிராகரித்ததற்கான தெளிவான அறிகுறியாகும். சிவசேனாவும் பாஜகவும் ஒன்றாகப் போராடுவதால், மக்கள் வளர்ச்சிக்காக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று சிவசேனா தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கெய்க்வாட்டை ஒரு இளம் தலைவர் என்று ஒப்புக்கொண்டார். மேலும், அவர் தனது வாக்காளர்களுடன் இதயப் பூர்வமான அன்பு வைத்துள்ளதால் அவரை மீண்டும் தேர்வு செய்யுமாறு தாராவி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆஷிஷ் மோரே 11 ஆம் வகுப்புவரைதான் படித்துள்ளார். அவர் தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.68.94 லட்சம். அதில் அவருடைய மனைவியின் சொத்தும் அடங்கும். மேலும், அவரது மனைவி ஹர்ஷலா மோரேவுடன், பிரஹன்மும்பை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார். 2018 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா நவநிர்மான சேனாவில் 6 மாநகராட்சி உறுப்பினர்களில் ஒருவராக இருந்த இவர் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான சேவா கட்சிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். சிவசேனா தலைவர்கள் கூற்றுப்படி, தாராவியிலிருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ சீட்டை கட்சி உறுதியளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஒரு குடிமை ஊழியரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மோரே கைது செய்யப்பட்டார்.
ஏ.ஐ.எம்.ஐஎம் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்) தலித் வேட்பாளர் மனோஜ் சன்சாரேவும் தராவியியிலிருந்து களத்தில் இறங்கியுள்ளார். அதனுடைய வேட்பாளர் காங்கிரஸின் வாக்கு வங்கியை பெற்றுவிடலாம் என்று பலரும் உணருகின்றனர்.
வதாலாவில் ஒரு மாநகராட்சி உறுப்பினராகவும் ஆட்சிக்கு எதிரானவராகவும் அவர் பணியாற்றினார் என்றும் அதை கெய்க்வாட் செய்யத் தவறிவிட்டார் என்றும் சன்சாரே நம்புகிறார்.
“தாராவியில் உள்கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு இங்கு உயர்நிலைப்பள்ளி இல்லை. சுமார் 10 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள தாராவியில் சியான் மாதிரி ஒரு மருத்துவமனை தேவை. காங்கிரஸ் சிறுபான்மை சமூகத்தினரிடையே பிளவு அரசியலை மட்டுமே செய்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. கெய்க்வாட் அமைச்சராக இருந்தார். ஆனால், அவர் தாராவியின் தலைவிதியை மாற்றத் தவறிவிட்டார். ஒரு மாநகராட்சி உறுப்பினராக எனது பணியைப் பார்த்தவர்கள் நிச்சயமாக எனக்கு வாக்களிப்பார்கள் என்பதால் நான் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.” என்று சன்சாரே தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும்போது கூறினார்.
மறுபுரம், கெய்க்வாட் மக்களுக்கு அவருடைய பணி தெரியும் என்றும் தன்னை மக்கள் எம்.எல்.ஏ என்று கருதி மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் கூறினார். “நீங்கள் தாராவி மக்களிடம் என்னுடைய பணியைப் பற்றி கேளுங்கள். தாராவியில் வசிக்கும் மக்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நான் அங்கே இருந்திருக்கிறேன். 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் எதிர்ப்பு இருந்தபோது என்னுடைய பணி காரணமாக 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர். நான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று கெய்க்வாட் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாரவி மறு அபிவிருத்தி திட்டம் குறித்து கேட்டபோது, கெய்க்வாட், “தாரவியின் மறுவடிவமைப்பை விரைவுபடுத்த நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தாராவி மறு அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் முதல்வர் மற்றும் வீட்டுவசதி அமைச்சருக்கு பல கடிதங்களை எழுதினேன். ஆனால், அவற்றுக்கு எந்த பதிலும் இல்லை. எனது வெற்றிக்குப் பின்னர் தாரவியின் முகத்தை மாற்றுவதற்கான எனது போராட்டத்தைத் தொடருவேன்.” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.