Maharashtra government formation supreme court verdict Maharashtra floor test
Maharashtra government formation supreme court verdict : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. எந்த கட்சியும் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்திருந்தது. அதே போன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி அமைத்திருந்தனர். சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சிவசேனா 2.5 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை பாஜக நிராகரித்தது.
Advertisment
பின்பு நவம்பர் 10ம் தேதி பாஜக ஆட்சி அமைக்க மாட்டோம் என்று ஆளுநரிடம் அறிவித்தது. பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சி அமைக்கவில்லை என்பதால் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். நவம்பர் 12ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி நிலவி வந்தது. இதற்கிடையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 22ம் தேதி கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாஜகவுடன் கை கோர்த்தார் அஜீத் பவார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜீத் பவார் துணை முதல்வராகவும் 23ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 25ம் தேதி முதற்கட்ட விவாதத்தில் பாஜக “அனைத்து எம்.எல்.ஏக்களையும் உடனே சட்டசபைக்கு அழைத்து வருவதில் கடினம் இருக்கிறது. ஆகவே சிறிது கால அவகாசம் கொடுங்கள்” என்று கேட்டிருந்தது. அஜீத் பவாரின் தனிநபர் ஆதரவோடு எவ்வாறு பாஜக கூட்டணி அமைக்கும். உடனே தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா தரப்பு விவாதம் செய்தது. இன்று இந்த வழக்கின் திர்ப்பு வெளியாகியுள்ளது. நாளை மகாராஷ்ட்ரா சட்டசபையில் பாஜக தன்னுடைய பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும். இந்த நிகழ்வு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும், 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் உருவாக்கப்பட்ட அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில் “குதிரை பேரம் போன்ற சட்டத்திற்கு புறம்பான காரியங்களை குறைப்பதற்கும், நிச்சயமற்ற தன்மையை தவிர்க்கவும், நிலையான அரசாங்கத்தை உறுதி செய்யவும் இந்த வழக்கில் சில இடைக்கால நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது”: என்று அறிவித்தனர். பதவிப்பிரமாணம் செய்த முதல்வருக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே மிகவிரைவில் தன்னுடைய பெரும்பான்மையை முதல்வர் நிரூபிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்திருக்கிறனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராகவும், அஜித் பவாரை துணை முதல்வராகவும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பினை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.
நேற்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த பின்னர் சிவசேனா, என்.சி.பி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் க்ராண்ட் ஹையாத் ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு தங்கள் கூட்டணியில் மொத்தம் 162 எம்.எல்.ஏக்கள் இருப்பதை அறிவித்தனர். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 144க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டணியை ஆதரிப்பதாகவும் அதற்கு மகா விகாஸ் அகாதி என்று பெயரிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் அஜித் பவாரை தவிர கூட்டணியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கின்றோம் என்றும் அந்த ரிட் பெட்டிசனில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆளுநர் ஒருசார்பினருக்கு மற்றும் ஆதரவு அளிப்பவர் போல் நடந்து கொள்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.