பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை பயணத்தின்போதே, ஆளுனர் பொறுப்பில் இருந்து விலகும் எனது விருப்பதை அவரிடம் கூறிவிட்டேன் என மராட்டிய ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுனர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், “ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுனரின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மும்பை பயணத்தின்போது கூறியுள்ளார்.
ஆளுனர் பகத்சிங் இனிவரும் நாள்களை புத்தகம் வாசித்தல், எழுதுதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபடுதல் என கழிக்க விரும்புகிறார்.
மகாராஷ்டிரா போன்ற மண்ணில் ஆளுனராக பொறுப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த முழுமையான பாக்கியம், புண்ணியம். மகாராஷ்டிரா வீரம் மிக்க போராளிகளின் பூமி” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மக்களிடமிருந்து நான் பெற்ற அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது.
பிரதமரிடமிருந்து நான் எப்போதும் அன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருக்கிறேன், இந்த விஷயத்தில் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆளுனர் பகத் சிங் கோஷ்யாரி, ஜன.7ஆம் தேதி ஜெயின் சமூக ஆன்மிக தலைவர்கள் குழுவுடன் உரையாடினார். அப்போது, “ஆளுநரின் பங்கு தனக்கு அதிருப்தியை மட்டுமே கொண்டு வந்தது” எனக் கூறினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/