மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்துமுடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும், சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது.மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பா.ஜ., வும், 56 இடங்களில் சிவசேனாவும் காங்கிரஸ் 44 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.,வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டது. முதல்வர் பதவியில் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்றும் அதிலும் முதல் இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சியினர்தான் ஆள வேண்டும் என்றும் சிவசேனா கண்டிஷன் போட்டது. இதை பா.ஜ., ஏற்க மறுத்துவிட்டது.
பா.ஜ., - சிவசேனா உறவு முறிவு : அதிக இடங்கள் பெற்ற கட்சி என்பதனடிப்படையில், பா.ஜ., ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தது. சிவசேனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கவர்னர் ஆட்சியமைக்க விடுத்த அழைப்பை, பா.ஜ. மறுத்தது. இதனையடுத்து, மகாராஷ்டிராவில், பா.ஜ.,- சிவசேனா இடையேயான உறவு முறிந்தது.
மத்திய அமைச்சர் ராஜினாமா : உறவு முறிந்ததை தொடர்ந்து, சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிவசேனாவுக்கு அழைப்பு : பா.ஜ.,வுக்கு அடுத்த அதிக இடங்கள் வெற்றி பெற்ற கட்சி என்பதடிப்படையில், சிவசேனா கட்சிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு கவர்னர் கோஷ்யாரியை, சிவசேனா கட்சி தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
என்சிபி கோரிக்கை நிறைவேற்றம் : பா.ஜ., தலைமையிலான மத்திய அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை, சிவசேனா கட்சி நிறைவேற்றியுள்ளது. தங்களுக்கு முதல்வர் பதவி தேவையில்லை என்று சரத் பவார் கட்சி துவக்கத்திலிருந்தே கூறிவரும் நிலையில், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சி அமைவதில் எந்தவொரு தடையுமில்லை.
ராகுல் காந்திக்கு பாராட்டு : சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அயோத்தி தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை : இதனிடையே, சிவசேனா உடனான உறவு குறித்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மும்பையிலும், காங்கிரஸ் கட்சி, டில்லியிலும் ஆலோசனை நடத்தி வருகிறது.
மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் மகாராஷ்டிரா அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், இனிதான் மெயின் பிக்சர் என்பது போல அங்கு காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
என்ன நடக்கும் : அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்பதனடிப்படையில், பா.ஜ. முதலில் கவர்னரை சந்தித்தது. பின் ஆட்சி அமைப்பதில் இருந்து பா.ஜ. பின்வாங்கியது. இதேபோன்ற நிலை, 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த விவகாரம் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வசம் சென்றது. இரண்டாவது இடங்களை பெற்ற கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுக்கும்போது, தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் தகவல்களை கவர்னருக்கு அளிக்க தேவையில்லை. ஆட்சி அமைத்தபிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவை தெரிவித்தால்,போதும் என்று இந்த நிகழ்வை சட்ட நிபுணர் பபாட் நினைவுபடுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு ஆயத்தமாகும் பா.ஜ., : மகாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. இந்த ஆட்சிக்கு நீண்ட் ஆயுள்காலம் இருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாததால், அங்கு விரைவில் தேர்தல் நடக்கும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் கணிப்பாக உள்ளது. இதற்காக, கட்சி தனது தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தமாக பணித்துள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை 6.30 மணியளவில் ஆளுநரை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதித்யா தாக்கரே, 'ஆட்சி அமைக்க விரும்புவதாக ஆளுநரிடன் நாங்கள் தெரிவித்தோம். இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டோம்.
ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார். எனினும், ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களது முயற்சிகள் தொடரும்’ என குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
ஆளுநர் அழைப்பு கடிதம் தந்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பின் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.