Advertisment

மகாராஷ்டிராவில் முடிவுக்கு வராத தொகுதிப் பங்கீடு: 8 தொகுதிக்கு மட்டும் இந்தியா கூட்டணியில் குழப்பம்

மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 8 தொகுதிளுக்கு மட்டும், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியின் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Maharashtra INDIA Alliance MVA seat sharing deal holding up for These 8 seats Tamil News

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் பல கட்ட பேச்சு வார்த்தை இருந்தபோதிலும், தொகுதிப் பங்கீட்டில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lok Sabha Election | Maharashtra: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பரபரப்பாக ஈடுப்பட்டுள்ளன. 

Advertisment

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 8 தொகுதிளுக்கு மட்டும், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியின் (எம்.வி.ஏ) தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சு வார்த்தை இருந்தபோதிலும், தொகுதிப் பங்கீட்டில் இன்னும் தீர்வு காண முடியவில்லை.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி (வி.பி.ஏ) சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே - யு.பி.டி), தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்குள் கோலா, பண்டாரா-கோண்டியா, ஹிங்கோலி, கோலாப்பூர், மும்பை சவுத் சென்ட்ரல், மும்பை வடமேற்கு நாசிக், புனே மற்றும் வார்தா ஆகிய 8 தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் இடைவிடாத விவாதமும், முடுவுக்கு வராத பேச்சு வார்த்தையும் நிலவி வருகிறது. 

நாசிக்: ஒவ்வொரு கட்சியும் இந்த வடக்கு மஹாராஷ்டிரா தொகுதியில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. 2019 தேர்தலில், பிரிக்கப்படாத சிவசேனாவின் ஹேமந்த் கோட்சே, ஐக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சமீர் புஜ்பாலை 2.92 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கோட்சே இப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு மாறியுள்ளார். அதே நேரத்தில் புஜ்பால் அஜித் பவாரின் சரத்சந்திர பவார் கட்சியுடன் இருக்கிறார். இந்த தொகுதியில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்த பிறகு, பேச்சு வார்த்தை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. 

கோலாப்பூர்: மூன்று தரப்பினரும் கோலாப்பூரில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், அங்கு 3 கட்சியினருக்கும் இடையில் போட்டா போட்டி நிலவுகிறது. கடந்த முறை, பிரிக்கப்படாத சிவசேனாவின் சஞ்சய் மாண்ட்லிக், ஐக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்சய் மகாதிக்கை 2.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சஞ்சய் மாண்ட்லிக் இப்போது சிவசேனாவில் இருக்கும்போது, ​​தனஞ்சய் மகாதிக் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார். அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டுள்ளது. மராட்டியப் பேரரசின் 5வது சத்ரபதியான சத்ரபதி ஷாஹு மகாராஜின் வழித்தோன்றலான ஸ்ரீமந்த் ஷாஹு சத்ரபதி, இந்த இடத்திலிருந்து எதிர்க்கட்சிகளின் ஒருமனதாக வேட்பாளராக வரலாம் என்றும், அவர் போட்டியிடும் கட்சி சின்னம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சவுத் சென்ட்ரல்: இந்த நகர்ப்புற தொகுதி சிவசேனா (யு.பி.டி) கட்சியின் தலைமையகமான தாதரை உள்ளடக்கியதால், கட்சியின் கவுரவப் போராக மாறி வருகிறது. 2019ல் பிரிக்கப்படாத சிவசேனாவைச் சேர்ந்த ராகுல் ஷெவாலே, காங்கிரஸின் ஏக்நாத் கெய்க்வாட்டை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராகுல் ஷெவாலே பின்னர் ஏக்நாத் ஷிண்டே அணியில் ஐக்கியமாகிவிட்டார். ஏக்நாத் கெய்க்வாட்டின் மகளும் மும்பை காங்கிரஸ் தலைவருமான வர்ஷா கெய்க்வாட் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். அதே நேரத்தில் சிவசேனா (யு.பி.டி) ராகுல் ஷெவாலேவை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை களமிறக்க விரும்புகிறது.

மும்பை வடமேற்கு: 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸின் சஞ்சய் நிருபத்தை 2.6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த சிவசேனாவின் கஜனன் கிர்த்திகர் இந்த தொகுதியை இப்போது பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கஜனன் கீர்த்திகர் இப்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கிறார். இருப்பினும், அவரது மகன் அமோல், சிவசேனாவில் (யு.பி.டி) தொடர்ந்து இருந்து வருகிறார். மேலும் இந்த முறை கட்சியின் போட்டியாளர்களில் ஒருவராகவும் உள்ளார். இதேபோல், உத்தவ் தாக்கரேவை பலமுறை விமர்சித்த 
சஞ்சய் நிருபம் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட கோருகிறார். உத்தவ் தாக்கரே ஏற்கனவே மும்பை தெற்கு மத்திய மற்றும் வடமேற்கு இடங்களுக்கு பார்வையாளர்களை அறிவித்துள்ளார். இதனால், அவரது கட்சி எளிதில் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை தெளிவாகக் சுட்டிக்காட்டுகிறது. 

புனே: காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் என்.சி.பி ஆகிய இரு கட்சிகளும் இந்த தொகுதிக்கு போட்டியிடுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 2019ல் பா.ஜ.க-வின் கிரிஷ் பாபட், காங்கிரஸின் மோகன் ஜோஷியை 3.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019 இல் புனேயில் பா.ஜ.க திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு முன்பு, அந்த இடம் காங்கிரஸின் பாரம்பரிய கோட்டையாக இருந்தது. மீண்டும் கோரிக்கை வைக்க காங்கிரஸ் இந்த காரணத்தை சுட்டிக்காட்டுகிறது.  என்.சி.பி தனது வேட்பாளரை பரிசோதிக்க விரும்புகிறது. ஏனெனில் சரத் பவார் புனே மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார். 

வார்தா: சரத் பவாரின் என்.சி.பி வார்தாவைக் கோருவதாகக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸும் அதைக் கவனிப்பதாகத் தெரிகிறது. உள்ளூர் கட்சி அலகு அதன் கோரிக்கையை விட்டுவிடக்கூடாது என்று மாநிலத் தலைமையை வற்புறுத்த முயற்சிக்கிறது. கடந்த இரண்டு முறை பா.ஜ.க-விடம் இருந்து காங்கிரஸ் கட்சியை இழந்துள்ளது என்பது என்.சி.பி வாதமாக உள்ளது. ஆனால் காங்கிரஸின் பதில், தொகுதியில் இன்னும் அதன் பிடி உள்ளதாக கூறி வருகிறது. 

பண்டாரா-கோண்டியா: சரத் பவார் தலைமையிலான குழுவும் காங்கிரஸும் பண்டாரா-கோண்டியா தொடர்பாக போட்டா போட்டியிட்டு வருகின்றன. இங்கு 2009 இல் வெற்றி பெற்ற ராஜ்யசபா எம்பி பிரஃபுல் படேல் செல்வாக்கு பெற்றுள்ளார். தற்போது அஜித் பவாரின் என்.சி.பி-யில் மூத்த தலைவராக இருக்கும் பிரஃபுல் படேல், கடந்த ஜூலை மாதம் சரத் பவாருக்கு எதிரான கிளர்ச்சியின் ஈடுப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவர். அதனால், சரத் ​​பவாரின் என்.சி.பி அணி இதைப் பறித்து அஜித் பவாருக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. 2019 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத என்.சி.பி-யின் நானா பஞ்சபுத்தே பா.ஜ.க-வின் சுனில் மெண்டேவிடம் சுமார் 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நானா படோல் 2014 இல் பா.ஜ.க வேட்பாளராக வெற்றி பெற்றார். ஆனால் அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். இதனிடையே 2017ல் நடந்த இடைத்தேர்தலில் இந்தத் தொகுதியில் ஒருங்கிணைந்த என்.சி.பி கட்சி வெற்றி பெற்றது.

அகோலா: 2019 ஆம் ஆண்டு பிரகாஷ் அம்பேத்கர் இங்கிருந்து போட்டியிட்டதால், இந்த தொகுதி வஞ்சித் பகுஜன் அகாடியின் (வி.பி.ஏ) வலுவான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரகாஷ் அம்பேத்கருக்கும் காங்கிரஸின் ஹிதாயத்துல்லா படேலுக்கும் இடையேயான வாக்குப் பிரிவு, பா.ஜ.க-வின் சஞ்சய் தோத்ரேவின் வெற்றிக்கு உதவியது. அவர் சுமார் 2.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறையும் அங்கிருந்து தனது வேட்பாளரை போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

ஹிங்கோலி: மராத்வாடாவில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனாவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள வித்தியாசமான தொகுதியாக உருவெடுத்துள்ளது. 2019 இல், பிரிக்கப்படாத சிவசேனாவின் ஹேமந்த் பாட்டீல் காங்கிரஸின் சுபாஷ் வான்கடேவை சுமார் 2.77 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இப்போது, ​​ஹேமந்த் பாட்டீல் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு மாறிவிட்டார். சுபாஷ் வான்கடே உத்தவ் தாக்ரேவின் சிவசேனாவின் நீடித்து வருகிறார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: What is holding up Opposition seat-sharing deal in Maharashtra? These 8 seats, say MVA insiders

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Maharashtra Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment