மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான 2 சிவசேனா பிரிவினருக்கு இடையேயான மோதல் தொடர்பான சில சிக்கல்கள் பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது. ஜூலை 27-ம் தேதி வரை இரு தரப்புகளுக்கும் நீதிமன்றம் அவகாசம் அளித்தது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசு கவிழ்வதற்கு வழிவகுத்த அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. உத்தவ் தாக்கரே ஜூன் 29 ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தாக்கரேவுக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுகு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராகவும் அதற்கு அடுத்த நாள் பதவியேற்றனர்.
அரசியலமைப்பு திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சிவசேனாவின் தலைமை கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே பிரிவினரால் பரிந்துரைக்கப்பட்டதை அங்கீகரித்த மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகரின் முடிவையும் இந்த வழக்கில் எதிர்க்கப்பட்டுள்ளது. “கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கொறடாவைத் தவிர வேறு ஒரு கொறடாவை சபாநாயகர் அங்கீகரிப்பது தவறானது” என்று உத்தவ் தாக்கரே தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி புதிய அரசை பதவியேற்கச் செய்திருக்கக் கூடாது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
மேலும், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் தடையை மீறி எந்த மாநில அரசுகளையும் கவிழ்க்க முடியும் என்றால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கபில் சிபல் வாதிட்டார். பத்தாவது அட்டவணையின்படி, ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு மாறிய 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சி உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்ததன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுவதாக அவர் கூறினார்.
“மக்களின் தீர்ப்பு என்னவாகும்? பதவி விலகலைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட அட்டவணை, கட்சித் தவறைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பத்தாவது அட்டவணை தலைகீழாக மாறிவிட்டது” என்று கபில் சிபல் கூறியதாக பார் & பெஞ்ச் கூறியுள்ளது.
தாக்கரே முகாம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பத்தாவது அட்டவணையில் உள்ள நிபந்தனை என்னவென்றால், நீங்கள் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மூன்றில் இரண்டு பங்கு வேறு கட்சியுடன் இணைக்கப்பட வேண்டும். “எனது நண்பர்கள் வேறு கட்சியில் இணையவில்லை என்பது பொதுவான கருத்து. அவர்கள் தங்களை பாஜக என்று அழைத்துக்கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.
மேலும், உத்தவ் முகாம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, “தகுதி நீக்கம் குறித்த கேள்வியை ஆளுநரால் எதிர்கொள்ள முடியாது” என்று கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே முகாம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “ஒரு கட்சியில் உள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இன்னொருவர் தலைமை தாங்க வேண்டும் என்று நினைத்தால் ஒன்றும் தவறில்லை” என்றார்.
“நீங்கள் கட்சிக்குள் போதுமான பலத்தை சேகரித்து, கட்சியில் இருந்து வெளியேறாமல் தலைவரைக் கேள்வி கேட்கும் நேரத்தில், உங்களை வீட்டில் அவையில் தோற்கடிப்போஒம் என்று கூறுவது கட்சியில் இருந்து விலகுவது அல்ல” என்று சால்வே கூறினர்.
ஜூலை 11 ஆம் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, உத்தவ் தாக்கரே கோஷ்டியின் எம்எல்ஏக்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தலின் போது மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”