Advertisment

மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு; மத்திய படைகள் தயார் - ஆளுநர் கடிதம்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து திரும்பியதும், மத்தியப் படைகள் அவர்களை ராஜ்பவனுக்கு அழைத்துச் செல்லும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Maharashtra political crisis, Maharashtra Governor central forces, Maharashtra Governor ajay bhalla letter, மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி, ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா, ஆதித்ய தாக்கரே, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு, மத்தியப் படைகள் தயார், கோஷ்யாரி, Governor Koshiyari, Y Plus security to rebel MLAs, Maharashtra violence, Maharashtra central forces, Eknath Shinde, Shiv Sena, BJP, Aaditya Thackeray

நவி மும்பையில் உள்ள தலோஜாவில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை தளத்திற்கு மத்தியப் படைகள் ஏற்கனவே வந்துவிட்டன. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து திரும்பியதும், மத்தியப் படைகள் அவர்களை ராஜ்பவனுக்கு அழைத்துச் செல்லும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

Advertisment

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு பேசிய அம்மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி, நிலைமையை சமாளிக்க போதுமான மத்திய பாதுகாப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை சி.ஆர்.பி.எஃப் வீரர்களை உள்ளடக்கிய ஒய்-பிளஸ் பாதுகாப்பை 15 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி, ஜூன் 25 தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு மாநில காவல்துறையிடம் கேட்டுக் கொண்டாலும், இந்த எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டபோது போலீசார் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அதனால், மத்திய பாதுகாப்புப் படைகளின் போதுமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேவைப்பட்டால், நிலைமையை சமாளிக்க தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று ஆளுநர் கோஷ்யாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கோவிட் -19 க்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி, ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மகாராஷ்டிரா ராஜ்பவன் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, ​​ஆளுநர் கோஷ்யாரியின் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆளுநர் கோஷ்யாரி ஜூன் 25 ஆம் தேதி மகாராஷ்டிரா டி.ஜி.பி ரஜ்னிஷ் சேத்துக்கு எழுதிய கடிதத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அந்த கடிதத்தில் கோஷ்யாரி, “சிவசேனாவின் 38 எம்.எல்.ஏ.க்கள், பிரஹர் ஜன் சக்தி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடமிருந்து ஜூன் 25, 2022 தேதியிட்ட பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. சில அரசியல் தலைவர்களால் ஆத்திரமூட்டும் மற்றும் அச்சுறுத்தும் அறிக்கைகளின் பின்னணியில் அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளனர். ஏற்கனவே, சில எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. போலீசார் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்

எனவே, எம்.எல்.ஏ.க்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீடுகளுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்… இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த கடிதத்தின் நகல்கள் மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ஏ.எம். லிமாயே மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ்-பாட்டீல் ஆகியோரின் உத்தரவின் பேரில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சனிக்கிழமை ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த வால்ஸ்-பாட்டீல், ஷிண்டேவின் குற்றச்சாட்டை விஷமத்தனமானது என்றும் பொய்யானது என்றும் கூறினார்.

வால்ஸ்-பாட்டீலின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், “கவுகாத்தி சென்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களின் அலுவலகத்திலும், இல்லத்திலும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை… மகாராஷ்டிரா காவல்துறை விழிப்புடன் உள்ளது மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை (எதுவேண்டுமானாலும்) எழும்பினால் அதை சமாளிக்க தயாராக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு அமலில் உள்ளது. அமைதியை சீர்குலைக்க யாரேனும் முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, துணை போலீஸ் கமிஷனர்களை சிவ சைனிக்களைச் சந்தித்து, நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றாலும், அவர்களின் பட்டியலில் உள்ள ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே மற்றும் பிரகாஸ் சர்வே ஆகியோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பில் உள்ளனர்.

“உளவுத்துறையின் அச்சுறுத்தல் அறிவுறுத்தலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான அச்சுறுத்தல் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள குடல்கரின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டது. மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான தானாஜி சாவந்தின் அலுவலகம் புனேயில் சனிக்கிழமை சூறையாடப்பட்டது.

யுவசேனா தொண்டர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய யுவசேனா தலைவரும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பை வழங்குவதாக மத்திய அரசை விமர்சித்தார். “காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு சி.ஆர்.பி.எஸ் பாதுகாப்பு கோரி வருகிறோம். ஆனால், அது வழங்கப்படவில்லை … இந்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்று ஆதித்ய தாக்கரே கூறினார்.

இதற்கிடையில், எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு அகற்றப்படவில்லை என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நவி மும்பையில் உள்ள தலோஜாவில் உள்ள மத்திய பாதுகாப்புப் படைகளின் தளத்திற்கு கூடுதல் மத்திய பாதுகாப்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Maharashtra Shiv Sena Uddhav Thackeray
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment