மகாராஷ்டிராவில் 5 நாட்களான பாஜக- ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ”நான் மீண்டும் வந்துவிட்டேன்; இப்போது என்னுடன் ஷிண்டே இருக்கிறார்” என்று தேவேந்திர பட்னாவிஸ் அதிரடியாக பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சிவசேனா அதிருப்தி எம் எல் ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று கொண்டது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகு நேற்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சிவசேனா அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயை சட்டமன்ற சிவசேனா தலைவராக புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகர் அங்கீகரித்து இருக்கிறார். இதனால் இன்று நடந்த பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்று சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஷிண்டே தரப்பு கொறடா பரத் கோகாவாலா உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதோடு உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் ஷிண்டே அணி கொறடா பரத் கோகாவாலா நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார். 16 பேரும் சபாநாயகர் தேர்தலில் ஷிண்டே ஆதரவு வேட்பாளரை எதிர்த்து வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று ஷிண்டே அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதற்காக காலையில் சட்டமன்றம் கூடியது. இதில் புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.சந்தோஷ் இன்று ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்துவிட்டார். அவை கூடியதுமே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணப்பட்டனர். இதில் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக 164 பேர் வாக்களித்தனர். அதேசமயம் அரசுக்கு எதிராக 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதித்தொடர்ந்து ஷிவசேனா எம் எல் ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில் ‘ நான் மீண்டும் வந்திருக்கிறேன். தற்போது என்னுடன் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். என்னை அவமானப்படுத்திய நபர்களுக்கு, இது ஒரு நல்ல பதிலடி. நான் அவர்களை மன்னித்துவிட்டேன். அரசியலில் எதையும் மனதை பாதிக்கும் அளவிற்கு எடுத்துச் செல்ல கூடாது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்’ எங்களுக்கு ஆட்சி அதிகாரம் தேவையில்லை. ஆனால் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. பிரதமர் மோடி என்னை துணை முதல்வரக செயல்பட கட்டளையிட்டுருக்கிறார். நான் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணையாக இருந்து செயல்படுவேன். எந்த விரோதமும், பதவிப் போட்டியும் இல்லாமல் ஆட்சி நடைபெறும்’ என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“