மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி பரிந்துரைத்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
நடந்துமுடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பா.ஜ., வும், 56 இடங்களில் சிவசேனாவும் காங்கிரஸ் 44 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.,வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டது. முதல்வர் பதவியில் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்றும் அதிலும் முதல் இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சியினர்தான் ஆள வேண்டும் என்றும் சிவசேனா கண்டிஷன் போட்டது. இதை பா.ஜ., ஏற்க மறுத்துவிட்டது.
பா.ஜ., – சிவசேனா உறவு முறிவு : அதிக இடங்கள் பெற்ற கட்சி என்பதனடிப்படையில், பா.ஜ., ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தது. சிவசேனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கவர்னர் ஆட்சியமைக்க விடுத்த அழைப்பை, பா.ஜ. மறுத்தது. இதனையடுத்து, மகாராஷ்டிராவில், பா.ஜ.,- சிவசேனா இடையேயான உறவு முறிந்தது.
மத்திய அமைச்சர் ராஜினாமா : உறவு முறிந்ததை தொடர்ந்து, சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிவசேனாவுக்கு அதிர்ச்சி : பா.ஜ.,வுக்கு அடுத்த அதிக இடங்கள் வெற்றி பெற்ற கட்சி என்பதடிப்படையில், சிவசேனா கட்சிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். நவம்பர் 11ம் தேதி இரவு கவர்னர் கோஷ்யாரியை, சிவசேனா கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். சிவசேனாவிடம், போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால், கவர்னர் கோஷ்யாரி, உடனடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை ஆட்சியமைக்க அழைத்தார்.
உச்சநீதிமன்றத்தை நாடுகிறது சிவசேனா : கவர்னர் உடனான சந்திப்பின் போது, சிவசேனா தரப்பில், 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த கவர்னர் கோஷ்யாரி, உடனடியாக சரத் பவாரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். கவர்னரின் இந்த செயலை கண்டித்துனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : இதனிடையே, மும்பையிலிருந்து டில்லிக்கும், டில்லியிலிருந்து மும்பைக்கு பறந்து பறந்து காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்தினர். ஆனால், அவர்களிடையே, கடைசிவரை உடன்பாடு எட்டப்படவில்லை
சரத்பவார் மறுப்பு : இந்த ஆலோசனையின் இடையே, சோனியா – சரத் பவார் இடையே சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த தகவலை சரத் பவாரே திட்டவட்டமாக மறுத்தார். சரத் பவாரின் இந்த பேட்டி, அவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படாததை வெளிக்காட்டியது.
ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை : மகாராஷ்டிராவில், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, யாரும் ஆட்சியமைக்க போதிய எம்எல்ஏக்கள், எந்த கட்சியிலும் இல்லாத காரணத்தினால், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பதாக கவர்னர் கோஷ்யாரி தெரிவித்தார். இதற்கான ஆவணங்கள், ஒப்புதலுக்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் : மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரியின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி அமல் : ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், மகாராஷ்டிராவில் 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த அரசியல் களேபரங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.