மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியின் போது, பாலத்தின் பலகையில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஷாபூர் தாலுகாவில் உள்ள சர்லம்பே கிராமத்திற்கு அருகே நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இடிந்து விழுந்த கிரேன், பாலம் கட்டுமானம் மற்றும் நெடுஞ்சாலை கட்டுமான திட்டங்களில் ப்ரீகாஸ்ட் பாக்ஸ் கர்டர்களை நிறுவ பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் கேன்ட்ரி கிரேன் (mobile gantry crane) ஆகும்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே, போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் NDRF குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்று செவ்வாய்க்கிழமை காலை விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழக (MSRDC) அமைச்சர் தாதா பூஸ் கூறினார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது ஆறு பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்ருதி மகாமார்க், இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் என்று பெயரிடப்பட்டது, இது மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் 701-கிமீ நீளமுள்ள விரைவுச்சாலையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“