மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்பவர்களைக் கண்காணிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்களில் ஈடுபடும் தம்பதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் தாய்வழி குடும்பங்கள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க, “கலப்பு திருமண-குடும்ப ஒருங்கிணைப்புக் குழு (மாநில அளவில்)” என்ற பெயரில் ஒரு குழுவை அமைக்கப்பட்டுள்ளது. மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நேற்று (செவ்வாய்க்கிழமை ) இதுகுறித்து தெரிவித்தது.
மகாராஷ்டிரா அரசு இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான மங்கள் பிரபாத் லோதா தலைமையிலான இந்தக் குழு, கலப்பு திருமணத்தால் தாய்வழி குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும், மாவட்ட அளவிலான முன்முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தின்படி, இந்த முயற்சியானது பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும், தொடர்புகொள்வதற்கும் அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு தளத்தை உருவாக்கும். மத்திய மற்றும் மாநில அளவில் கொள்கைகள், நலத்திட்டங்கள் மற்றும் இப்பிரச்சினை தொடர்பான சட்டங்கள் - மற்றும் முன்னேற்றத்திற்கான மாற்றங்களை பரிந்துரைத்து தீர்வு காண்பதற்கும் இந்தக்குழு பணிபுரிகிறது.
இந்தக் குழுவில் அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த 12 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழு தனது பணி முடித்ததும், கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19 அன்று, அமைச்சர் லோதா, தாய்வழி குடும்பத்தின் ஆதரவின்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடமிருந்து பிரிந்து வாழும் பெண்களைக் கண்டறிய சிறப்புப் படையை அமைக்குமாறு மாநில மகளிர் ஆணையருக்கு உத்தரவிட்டார். டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் வசாய் பகுதியைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் அவரது காதலன் அப்தாப் பூனாவாலாவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து இந்த உத்தரவு போடப்பட்டது.
செவ்வாய்கிழமை வெளியிட்ட தீர்மானத்தின்படி, இப்பிரச்னையில் மாவட்ட அதிகாரிகளுடன் குழு கூட்டங்களை நடத்தி ஆலோசிக்கும். 7 அளவுகளில் பணியை மதிப்பாய்வு செய்யும், முக்கியமாக பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கலப்பு மதமாற்ற திருமணங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும். மத வழிபாட்டுத் தலங்களில் நடத்த திருமணங்கள் குறித்து தகவல் பெறும். வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர்கள் குறித்தும் தகவல் பெறும்.
இந்த குழு, முத்திரைத்தாள் மற்றும் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கலப்பு திருமணங்கள் செய்த தம்பதிகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும். புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது தாய்வழி குடும்பங்களை தொடர்பு கொள்ளும். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும். பெண்களின் தாய்வழி குடும்பங்கள் பிரிந்து இருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் முகவரிகளைப் பெற்று, அத்தகைய சந்தர்ப்பங்களில் பெற்றோரைத் தொடர்புகொள்ளும், வேண்டும்மென்றால் ஆலோசனைகளை வழங்கும்.
கடந்த வாரம், ‘லவ் ஜிஹாத்’ கீழ் கலப்பு திருமணம் குறித்து சட்டம் தொடர்பாக மகாராஷ்டிராவின் நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இது குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டம் உள்ளது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/