Vallabh Ozarkar
மகாராஷ்டிராவுக்குப் பதிலாக குஜராத்திற்குச் சென்ற டாடா-ஏர்பஸ் திட்டம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், யுவசேனா தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ.,வுமான ஆதித்யா தாக்கரே, தேவேந்திர ஃபட்னாவிஸுக்குப் பதிலாக துணை முதல்வராக இருந்திருந்தால், அரசாங்கத்திற்கு தாம் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றிருப்பேன் என்று சனிக்கிழமை தெரிவித்தார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறிய ஆதித்யா தாக்கரே, “மாநிலத்திலும் அரசாங்கத்திலும் ஸ்திரமின்மை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து ஆலோசிக்க டெல்லியிலும் கூட்டம் நடக்கிறது. எந்த தொழிலதிபரும் இந்த அரசை நம்பவில்லை; இந்த அரசு எத்தனை நாட்களுக்கு இயங்கும் என்று தெரியவில்லை. நான் இந்த மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்திருந்தால், அவரது (ஃபட்னாவிஸ்) பெயரும் கெடுக்கப்படுவதால், இந்த அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருப்பேன். அவர் உண்மையில் ராஜினாமா செய்துவிட்டு புதிய தேர்தலை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையும்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு பா.ஜ.க அரசு தீபாவளி ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்; விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை
“இந்த நிலையற்ற அரசாங்கத்தின் மீது மாநில மக்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறையினருக்கும் நம்பிக்கை இல்லை. மாநிலத்திலும் அரசாங்கத்திலும் அமைதியின்மை மற்றும் ஸ்திரமின்மை உள்ளது” என்று கூறிய முன்னாள் அமைச்சரான ஆதித்யா தாக்கரே, தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். “தொழில்துறை அமைச்சர் செப்டம்பரில் ஊடகங்களுக்கு டாடா-ஏர்பஸ் திட்டத்தை மாநிலத்திற்குள் கொண்டு வருவோம் என்று கூறினார், ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார். இப்போது தொழில்துறை அமைச்சரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் பதவி விலகுவாரா?” என்று ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவையும் தாக்கிய ஆதித்யா தாக்கரே, அவர் மற்ற முதல்வர்களைப் போல முதலீட்டை ஈர்க்க எங்கும் செல்லவில்லை என்று கூறினார். “மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் மகாராஷ்டிராவுக்கு வாய்ப்புகளைத் தேடி வந்தனர், ஆனால் எங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான முதல்வர் எங்கும் செல்லவில்லை. அவர் கணபதி-நவராத்திரி மண்டலங்களுக்குச் செல்வதில் மும்முரமாக இருக்கிறார்,'' என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil