2022-23 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
34 மாநிலங்களில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றன. மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. இந்த புதிய ஊதியம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 2021-22இல் தினக்கூலியாக ரூ294 இருந்த நிலையில், 2022-23க்கு 315ஆக உயர்ந்துள்ளது. குறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகலாயாவுக்கு கிடைத்துள்ளது. அங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளது.
மேகாலயாவைத் தவிர, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களும் தினக்கூலி ஊதியம் 2 சதவீதத்திற்கும் குறைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன.
அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் 3 முதல் 4% வரையும், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் வரையும் ஊதிய உயர்வை பெற்றுள்ளன.
ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய 10 மாநிலங்கள் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங்கள் ஒரு நாளைக்கு ரூ 4 முதல் ரூ 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
MGNREGA ஊதிய விகிதங்கள் CPI-AL (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்) மாற்றங்களின்படி நிர்ணயிக்கப்படுகின்றன, இது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
புதிய ஊதிய விகிதங்களின்படி, ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக NREGS ஊதியம் பெறுவதில் முதலிடத்தில் ஹரியானா(தினக்கூலி 331ரூபாய்) உள்ளது. இதைத் தொடர்ந்து, கோவா(ரூ315), கேரளா(ரூ311), கர்நாடகா(ரூ309), அந்தமான நிக்கோபார்(308) ஆகும். குறைவான ஊதிய உயர்வில் திரிபுரா(தினக்கூலி ரூ212), பிகார்(ரூ210), ஜார்க்கண்ட்(ரூ210), சத்தீஸ்கர்(ரூ204),மத்திய பிரதேசம்(ரூ204) ஆகும்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரண்டுக்கும் ஒரு நாளைக்கு ரூ.213 ஆகவும், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமுக்கு ரூ.216 ஆகவும், ஒடிசா மற்றும் சிக்கிமுக்கு ரூ.222 ஆகவும், மேற்கு வங்கத்தில் ரூ.223 ஆகவும், ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.227 ஆகவும் ஊதிய தொகை உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.