லோக்சபா தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டது, மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாட்டிலும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜ்நந்த்காவிலும், சத்தீஸ்கர் முன்னாள் உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு மகாசமுந்திலும் போட்டியிடுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Major takeaways from Congress first list for Lok Sabha polls: Message to veterans, emphasis on south
பூபேஷ் பாகெல் மற்றும் தாம்ரத்வாஜ் சாஹு களமிறங்குவது, 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட்ட இந்தி இதயப் பிரதேசமான மாநிலங்களில் காங்கிரஸின் மூத்த தலைவர்களை நிறுத்துவதற்கான விருப்பத்தை அடையாளம் காட்டுகின்றன. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிடுவது குறித்தும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கே.சி.வேணுகோபாலை களமிறக்கியதன் மூலம், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிடுகிறது. வேணுகோபால் இதற்கு முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளாவின் ஆலப்புழாவில் போட்டியிடுகிறார். கேரளாவின் 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) கடந்த முறை தோல்வியடைந்த ஒரே தொகுதி இதுதான்.
வேணுகோபாலின் ராஜ்யசபா பதவிக்காலம் இன்னும் இரண்டாண்டுகளுக்கு மேல் இருப்பதால், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவு ஆச்சரியமாக உள்ளது. வேணுகோபால் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதன் விளைவாக எஞ்சிய காலத்திற்கான இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க எளிதில் வெற்றிபெறும்.
2019ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2004 முதல் அவரது தாயார் சோனியா காந்தி பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியான ரேபரேலியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தேர்தல் அறிமுகம் குறித்து இன்னும் சஸ்பென்ஸ் உள்ளது. காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டியின் அடுத்த கூட்டம் மார்ச் 11-ம் தேதி நடைபெற உள்ளது, அப்போது உ.பி.யில் இருந்து வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்படலாம்.
வேணுகோபால் மற்றும் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் ஆகியோர் அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் அக்கட்சி தற்போது வைத்திருக்கும் 18 இடங்கள் அடங்கும். 39 வேட்பாளர்களில், 28 பேர் அல்லது 70% க்கும் அதிகமானவர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் (கேரளாவில் இருந்து 16 பேர், கர்நாடகாவில் இருந்து ஏழு பேர், தெலுங்கானாவில் இருந்து 4 பேர், மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் இருந்து ஒருவர்). காங்கிரஸ் கட்சிக்கு தெற்கில் இரண்டு அரசாங்கங்கள் உள்ளன மற்றும் கடந்த முறை கேரளாவில் இருந்து அதிகபட்சமாக எம்.பி.க்கள் இருந்தனர்.
வேட்பாளர்களில் 15 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 24 பேர் பட்டியல் சாதிகள் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 39ல் எட்டு எஸ்.சி/எஸ்.டி இடங்கள் அடங்கும். கட்சியின் படி, வேட்பாளர்களில் 12 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள், 71-76 வயது வரம்பில் ஏழு பேர் உள்ளனர்.
உண்மையான ஆச்சரியங்கள் இல்லை
பட்டியலில் உண்மையான ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. கேரளாவில் திருச்சூர் எம்.பி டி.என் பிரதாபனைத் தவிர மற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவருக்கு பதிலாக வடகரை எம்.பி., முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன் போட்டியிடவுள்ளார். பா.ஜ.க சார்பில் களமிறக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியை அவர் எதிர்கொள்கிறார். இத்தொகுதியில் இடதுசாரி வேட்பாளர் சி.பி.ஐ.,யின் வி.எஸ் சுனில் குமார். வடகரையில் காங்கிரஸ் கட்சி தனது இளம் எம்.எல்.ஏ ஷபி பரம்பிலை நிறுத்தியுள்ளது.
மறுவாய்ப்பு அளிக்கப்பட்ட எம்.பி.க்களில் ராகுல் காந்தி, தனது இந்தியா கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.யின் அன்னி ராஜாவை எதிர்த்து களமிறங்குகிறார், மேலும், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர், கண்ணூரில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், மாவேலிக்கரையில் இருந்து மக்களவையில் காங்கிரஸ் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இளம் தலைவர்கள் ஹிபி ஈடன் மற்றும் டீன் குரியகோஸ் முறையே எர்ணாகுளம் மற்றும் இடுக்கியில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில், பெங்களூரு ஊரகத் தொகுதியில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரரும், தற்போதைய எம்.பி.யுமான, டி.கே.சுரேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மருமகளும், முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகளுமான கீதா சிவராஜ்குமாரை ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் கடந்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்தார். அவர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஷிமோகாவிலிருந்து பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ் எடியூரப்பாவை எதிர்த்து ஜே.டி(எஸ்) வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அந்த இடத்தை எடியூரப்பாவின் மகன் பி.ஒய் ராகவேந்திரா கைப்பற்றி உள்ளார்.
ஹாசனில் முன்னாள் எம்.பி மறைந்த ஜி புட்டசாமி கவுடாவின் பேரன் எம்.ஷ்ரேயாஸ் படேலை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், சிட்டிங் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை எதிர்கொள்வார். ஷ்ரேயாஸ் படேல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியில் தோல்வியடைந்தார். மற்ற வேட்பாளர்கள் பிஜாப்பூர் (எஸ்.சி-ஒதுக்கீடு) தொகுதியில் இருந்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹெச்.ஆர்.அல்கூர், ஹாவேரியில் இருந்து ஆனந்தசுவாமி கடாதேவர்மத், தும்கூருவில் இருந்து எஸ்.பி.முத்தஹனுமேகவுடா, மற்றும் மண்டியாவிலிருந்து தொழில் ரீதியாக ஒப்பந்ததாரரான வெங்கடராமகவுடா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முத்தஹனுமேகவுடா 2014 முதல் 2019 வரை தும்கூரில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார், ஆனால் 2019 இல் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வேட்பாளர் எச்.டி.தேவ கவுடாவுக்காக தனது இடத்தைக் காலி செய்ய வேண்டியதாயிற்று. இதனால் மனமுடைந்த முத்தஹனுமேகவுடா 2022-ல் காங்கிரஸை விட்டு விலகி பா.ஜ.க.,வில் சேர்ந்தார், கடந்த மாதம் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
சத்தீஸ்கரில், காங்கிரஸ் கட்சி கோர்பாவிலிருந்து மீண்டும் சிட்டிங் எம்.பி ஜோத்சனா மஹந்தை நிறுத்தியுள்ளது; முன்னாள் மாநில அமைச்சர் ஷிவ்குமார் தஹாரியா, ஜாங்கிர்-சம்பா (எஸ்.சி-ஒதுக்கீடு) தொகுதியிலும் மற்றும் ராய்பூர் நகர மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ விகாஸ் உபாத்யாய், ராய்ப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தெலங்கானாவில் ஜாஹிராபாத்தில் முன்னாள் எம்.பி சுரேஷ் குமார் ஷெட்கரை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாராயண்கேட் தொகுதியில் அவரை வேட்பாளராக கட்சி அறிவித்தது, ஆனால் பின்னர் அவரை மாற்றியது. மாநிலத்தின் மற்ற மக்களவை வேட்பாளர்கள் மஹபூபாபாத் (ST-ஒதுக்கீடு) தொகுதியிலிருந்து முன்னாள் எம்.பி மற்றும் மத்திய மந்திரி பொரிகா, மஹ்பூப்நகர் தொகுதியிலிருந்து AICC செயலாளர் சல்லா வம்ஷி சந்த் ரெட்டி மற்றும் நல்கொண்டாவிலிருந்து ரகுவீர் குந்துரு ஆகியோர் களமிறங்குகின்றனர்.
காங்கிரஸ் கட்சி, லட்சத்தீவில் முன்னாள் எம்.பி முகமது ஹம்துல்லா சயீதையும், மேகாலயாவில், ஷில்லாங்கில் இருந்து சிட்டிங் எம்.பி வின்சென்ட் பாலாவையும், துராவிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ சலேங் ஏ சங்மாவையும் நிறுத்தியுள்ளது. சிக்கிம் காங்கிரஸ் தலைவர் கோபால் செத்ரி சிக்கிம் தொகுதியில் போட்டியிடுகிறார்; திரிபுரா மேற்கு தொகுதியில் இருந்து திரிபுரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆஷிஷ் குமார் சாஹா போட்டியிடுகிறார்; மற்றும் நாகாலாந்தில் இருந்து எஸ்.சுபோங்மெரன் ஜமீர் போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.