ஓடும் ரயிலில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய நபர் கைது!

மலையாள நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவில் ஓடும் ரயிலில் மலையாள நடிகையிடம் அத்து மீற முயன்ற தமிழகத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ’கொடி வீரன்’ படத்தில் சசிகுமார் தங்கையாக நடித்திருந்தவர் நடிகை சனுஷா. மலையாள நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’ரேனிகுண்டா’படத்தில் மூலம் அறிமுகமான இவர் விமல், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில், சனுஷா கடந்த புதன்கிழமை, கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருச்சூர்க்கு மாவேலி எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளார்.

இரவு பயணம் என்பதால், சனுஷா உறங்கிக் கொண்டே ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு பக்கத்தில் இருந்த 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், சனுஷாவிடம் அத்து மீற முயன்றுள்ளார். அதிர்ச்சியில் கண்விழித்த சனுஷா பக்கத்தில் இருந்த லைட்டை ஆன் செய்து விட்டு, உதவிவுக்கு சத்தமிட்டுள்ளார். சனுஷாவின் சத்தத்தினால் எக்ஸ்ப்ரஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்பு, ரயில்வே காவல் துறை மற்றும் திருச்சூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பின்பு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை சனுஷா, ”நான் ரயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் என் மீது கை வைத்தது தெரிந்தது. திடுக்கிட்டு விழித்து பார்த்தேன். அப்போதே அந்த நபரின் கையை பிடித்துக் கொண்டு, உதவிக்கு சத்தமிட்டேன். ஆனால், என்னுடன் பயணித்த இருவர்கள் உதவிக்கு வராமல் தூங்குவது போல் நடித்தனர். அந்த செயல் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவுள்ளது. அருகில் இருப்பவர்களே உதவி செய்ய தங்குவது வருத்தத்தை அளிக்கிறது. சமூக வலைத்தளங்களில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடிப்பது முறையல்ல. பெண்கள் ஆபத்தில் இருக்கும் போது உடனடியாக உதவு முன்வர வேண்டும். இந்த சம்பவத்தில் எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக உள்ளனர். பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால் தைரியமாக சமாளிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை எதிர்த்து போராட தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close