அம்பானி மற்றும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சமாக ரூபாய் 300 கோடி பேரம் பேசப்பட்டதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ள நிலையில், அந்நபரின் பெயரை குறிப்பிடுவது சரி கிடையாது.
ஆனால், காஷ்மீரின் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் சண்டே எக்ஸ்பிரஸூடம் அளித்த பேட்டியில், " அந்நபரின் பெயரைக் குறிப்பிடுவது சரியாக இருக்காது, ஆனால் ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளராக யார் என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால், நான் ஆர்எஸ்எஸ் பெயரை குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.
குறிப்பிட்ட நபர் தனது தனிப்பட்ட வேலைக்காக வரும் பட்சத்தில், அவரை மட்டுமே குறிப்பிட வேண்டும். அவரின் எந்த அமைப்பைச் சார்ந்தவராக இருந்தாலும், அதைக் குறிப்பிட்டிருக்கக் கூடாது என்றார்.
இதற்கிடையில், மாலிக்கின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் கூறியதாவது, " அவரிடம் யார் என்பதை கேளுங்கள். ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். இதுகுறித்து நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும்.
2014இல் தேர்தலில் தோற்றதற்கு விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டோம் என்று சொன்னார். இதையெல்லாம் நாம் நம்புகிறோமா? இது அவரது கருத்தாக இருக்கலாம், உண்மை என்ன, எங்களுக்குத் தெரியாது" என்றார்.
முன்னதாக, ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், " நான் காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில், மூத்த ஆர்எஸ்எஸ் நபரின் கோப்பும், அனில் அம்பானி நிறுவனத்தின் மற்றொரு கோப்பும் ஒப்புதலுக்காக வந்திருந்தது.
இவற்றுக்கு அனுமதி அளித்தால் தலா ரூ.150 கோடி கிடைக்கும் என அத்துறையின் செயலர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை மறுத்துவிட்டு, நான் கொண்டு வந்த 5 ஜோடி துணியுடன் திரும்பிச் செல்லத் தயார் என்று கூறிவிட்டேன்.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பிரதமர் மோடியை சந்தித்து, இந்த இரண்டு கோப்புகள் பற்றித் தெரிவித்தேன். இந்த ஊழல் திட்டங்களை நிச்சயம் அமல்படுத்த வேண்டுமென்றால், வெறோரு நபரை நியமித்துக்கொள்ளுங்கள். நான் பதவி விலக தயாராக உள்ளேன்.
ஆனால் இந்தக் கோப்புகளுக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என்றேன். அச்சமயத்தில், பிரதமர் என்னைப் பாராட்டி, 'ஊழல் விவகாரத்தில் சமரசம் வேண்டாம்' என்றார்.
நாட்டிலேயே ஜம்மு-காஷ்மீரில்தான் ஊழல் அதிகளவில் உள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலும் 4 முதல் 5 சதவீத கமிஷன் லஞ்சமாக கேட்கப்படும் நிலையில், காஷ்மீரில் 15 சதவீத கமிஷன் கேட்கப்படுகிறது. ஆனால், எனது பதவிக்காலத்தில் பயம் இருந்தது. பெரியளவில் ஊழல் நடைபெறவில்லை.
அதே போல, ரோஷினி திட்டத்தை சுட்டிக்காட்டிய மாலிக், இதனால் NC தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் பயன் பெறுகிறார்கள் என்றார்.
அவரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று கூறிய NC மற்றும் PDP தலைவர்கள், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil