/indian-express-tamil/media/media_files/2025/10/15/puducherry-2025-10-15-20-03-27.jpg)
Puducherry
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பல பெரிய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து (Oil companies) பெறப்பட்ட சமூகப் பொறுப்பு நிதி (CSR Fund) முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என காங்கிரஸ் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
'கார்பரேட் நிறுவனங்களுக்காக உழைத்தார்': எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றச்சாட்டு
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
"ஏனாமில் மல்லாடி கிருஷ்ணராவ் அமைச்சராக இருந்தபோது, மக்களுக்காக உழைத்ததைவிட கார்பரேட் நிறுவனங்களுக்காகவே அதிக அளவில் உழைத்திருக்கிறார்."
"முதலமைச்சராக வைத்திலிங்கம் இருந்த காலத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்காகப் பல பணிகளைச் செய்து முடித்துள்ளார். ரிலையன்ஸ் மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட சிஎஸ்ஆர் நிதி முழுவதுமாகச் செலவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை அவர் விளக்க வேண்டும்."
துருப்பிடித்த ஈபிள் டவர் & சொத்துக் கணக்கு
தொடர்ந்து பேசிய வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஏனாமில் பாரிஸ் ஈபிள் டவர் (Paris Eiffel Tower) கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அந்த டவர் தற்போது துருப்பிடித்து வீணாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் மல்லாடி கிருஷ்ணராவிடம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்:
- ஆந்திர ஒப்பந்ததாரர்களை அடிக்கடி சந்தித்தது ஏன்?
- இலங்கைக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்தது எதனால்?
- அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்த சொத்து மதிப்பு எவ்வளவு, தற்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிட வேண்டும்.
தோல்விக்குப் பின்னும் அரசு அதிகாரத்தில் தலையீடு
மக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்ட மல்லாடி கிருஷ்ணராவ், தோல்வி அடைந்த பின்னரும் அரசு பதவிகளையும், முதலமைச்சரின் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்புகளையும், மரியாதையையும் குறைத்து வருவதாக வைத்தியநாதன் குற்றஞ்சாட்டினார்.
அவர் அமைச்சராக இருந்தபோது அரசு திட்டங்களுக்கு போலியான முறையில் பூஜைகள் போடப்பட்டு, அந்தப் பணி மேற்கொள்ளப்படாமலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அவர் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற போலியான அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய வைத்தியநாதன், பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டுவிட்டு, மக்கள் பணி செய்யுமாறு மல்லாடி கிருஷ்ணராவை கேட்டுக் கொண்டார்.
- பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.