இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டனில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினர் கோஷமிட்டனர். மேலும் ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது பேசிய கருத்துகளை பா.ஜ.கவிற்கு நினைவூட்டி கடுமையான விமர்சனம் செய்தார். "ஜனநாயகத்தை அழிப்பவர்கள்" இப்போது அதை "காப்பாற்ற வேண்டும்" என்று பேசுவது விந்தையானது என்றார்.
சில எதிர்க்கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய நிலையிர் சிலர் அமைதி காத்தனர். அதானி குழும விவகாரம், மத்திய ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்கவும், அவையை சீர்குலைக்கவும் ராகுல் விவகாரத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து பல எதிர்க்கட்சி தலைவர்களுடன் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, இந்தியாவில் பா.ஜ.க "ஜனநாயகத்தை நசுக்குகிறது" என்றார்.
மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு இடமில்லை. அவர்கள் ஒவ்வொரு தன்னாட்சி அமைப்பு மற்றும் நிறுவனத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எந்த அறிவிப்பும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை. அவர்கள் ஒரு சர்வாதிகாரி போல் நாட்டை நடத்துகிறார்கள். இவர்கள் ஜனநாயகம், தேசபக்தி, நாட்டின் பெருமை பற்றி பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லுங்கள்
தொடர்ந்து வெளிநாடு பயணங்களில் இந்தியா குறித்து மோடி பேசிய சில கருத்துகளை கார்கே குறிப்பிட்டார். 'முன்பு இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கமாக இருந்தீர்கள், ஆனால் இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறீர்கள்' சீனாவில் மோடி பேசியது குறித்து கூறினார்.
"தென் கொரியாவில் நீங்கள் பேசியது- கடந்த காலத்தில் என்ன பாவம் செய்தோமோ, இப்போது நாம் இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம் என மக்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. இதைத்தான் நாடு என்கிறார்கள் என்று சொன்னீர்கள். தொழிலதிபர்கள் வெளிநாட்டில் நல்ல வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேற விரும்பினர் என்று கூறுனீர்கள். இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்தவில்லையா? நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் எடுப்பதற்கு முன்பாக உண்மையின் கண்ணாடியை முதலில் பாருங்கள். உங்கள் அமைச்சர்களிடம் உங்களின் நினைவுகளை கொஞ்சம் திரும்பி பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்.
கனடாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஊழல்களையும் அழுக்குகளையும் உருவாக்கியவர்கள் இப்போது போய்விட்டார்கள் என்றும், இப்போது அந்தக் குழப்பத்தை நான் சுத்தம் செய்வேன் என்றும் பிரதமர் பேசியதாக கார்கே கூறினார். நீங்கள் ஜனநாயகத்தை அழித்து, அரசியல் சாசனத்தை சீரழிக்கிறீர்கள், எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஏஜென்சிகளை பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் முதலில் உண்மையின் கண்ணாடியை பாருங்கள் என்று கார்கே கூறினார்.
பா.ஜ.க-வின் திசை திருப்பும் செயல்
பி.ஆர்.எஸ் தலைவர் கே. கேசவ ராவ் கூறுகையில், அதானி குழும விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாததால், பா.ஜ.க அரசு காந்தியின் கல்வி சார்ந்த கருத்துக்களை அரசியல் பிரச்சினையாக்க பயன்படுத்துகிறது என்றார்.
சி.பி.எம் கட்சியின் எளமரம் கரீம் கூறுகையில், அதானி பிரச்சனை மற்றும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் தலையீடு பற்றிய விவாதத்தைத் தவிர்ப்பதற்காக பா.ஜ,க இவ்வாறு செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆர்.ஜே.டி தலைவர் மனோஜ் குமார் ஜா, ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு "கண்ணாடியை" காட்டியுள்ளார் என்றார். சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், "மாநிலங்களவை தலைவர் பியூஷ் கோயல், அவை உறுப்பினராக இல்லாத ராகுல் காந்தியை தாக்க அனுமதித்ததன் மூலம் ரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் புறக்கணிக்கப்படுகிறது என்று காந்தி கூறியது சரிதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று சாடினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.