“நாட்டின் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். இந்த 9 ஆண்டுகளில், 18 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்.
ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “அரசு மற்றும் பொதுத்துறையில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது… அவற்றை ஏன் அரசாங்கம் நிரப்பவில்லை?… நீங்கள் தனியார் துறைக்கு பணம் அனுப்புகிறீர்கள்… 82,000 கோடிகள் தருகிறீர்கள். அதற்கு பதிலாக பொதுத்துறையில் முதலீடு செய்யுங்கள். பொதுத்துறையில் 10 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள், ஆனால், 30,000 பேர் மட்டுமே வேலை செய்யும் அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு 82000 கோடி அனுப்புகிறீர்கள். அதனால், அவர் ஊக்கம் பெறுகிறார்.” என்று கூறினார்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி குறித்து பேசிய கார்கே, “நாட்டின் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்ப்டும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். பிரதமர் மோடி ‘இளைஞர்களே, நான் வந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்றார். இந்த 9 ஆண்டுகளில் 18 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே? அதை விடுங்கள், நீங்கள் 50 லட்சம் காலிப் பணியிடங்களைக்கூட நிரப்பவில்லை. 30 லட்சம் அரசுப் பணியிடங்களைக்கூட நிரப்பப்படவில்லை. பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு இந்தியா பெரும் விலை கொடுத்துள்ளதாக அவர் கூறினார். “ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, நாட்டின் செல்வத்தில் 62% முதல் 5% பேர் வைத்திருக்கிறார்கள். கீழே உள்ளவர்களிடம் 3-4% சொத்து உள்ளது. அதை நீங்கள் (குடியரசுத் தலைவர்) உங்கள் உரையில் குறிப்பிடவில்லை.” என்று கார்கே கூறினார்.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆளும் அரசை கடுமையாக சாடினார். “முன்பு நாங்கள் குடியரசுத் தலைவரின் ஜாதி அல்லது மதம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், முதன்முறையாக, பா.ஜ.க ஒரு ஆதிவாசியை குடியரசுத் தலைவராக்கியுள்ளது என்று நாடு முழுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதை அரசியல் பிரச்னையாக்கி… ராகுல் காந்தியை ‘பப்பு’ ஆக்க முயன்றீர்கள். ஆனால் அவர் உங்களை பப்புவாக்கி விட்டார்” என்று கடுமையாகச் சாடினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி புதன்கிழமை பதில் அளிப்பார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சில நாட்கள் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான நாடாளுமன்ற விவாதங்கள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“