Advertisment

நாசகார சக்திகளை நாம் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும்.. புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே

80 வயதான கார்கே- ஜக்ஜீவம் ராமுக்குப் பிறகு, சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் மற்றும் கடந்த 75 ஆண்டுகளில் தெற்கில் இருந்து காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் ஆறாவது தலைவர் ஆவார்.

author-image
WebDesk
New Update
Congress presidential elections

தரூர் கார்கேவை புதன்கிழமை வாழ்த்திய போது. பிரேம் நாத் பாண்டே

புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்தது தான், ஆனால் கூடவே ஒரு சிறிய ஆச்சரியத்தையும் அளித்தது. மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகள் (84.14%) பெற்று 24 ஆண்டுகளில், முதல் காந்தி குடும்பம் அல்லாத கட்சித் தலைவராக ஆனார். அதேநேரம் சசி தரூர் 1,072 வாக்குகள் (11.42%) பெற்று பலரை ஆச்சரியப்படுத்தினார்.

Advertisment

மொத்தமுள்ள 9,385 வாக்குகளில் 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

இதில் தரூர் பெற்ற 11% வாக்குகள், கட்சி மாற்றத்திற்கான வாக்குகளைப் பிரதிபலிக்கிறது.

தேர்தல் முடிவுகு பிறகு, கார்கேவின் இல்லத்திற்கு முதலில் வந்து வாழ்த்து தெரிவித்தவர்களில் தரூர் ஒருவர். சோனியா காந்தி மற்றும் அவரது மகளும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவும் கார்கேவின் இல்லத்திற்கு நேரில் சென்று கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியும், கார்கேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பாரத் ஜோடோ யாத்திரைக்காக புதன்கிழமை ஆந்திராவுக்கு வந்த ராகுல் காந்தி, கார்கேவிடம் தொலைபேசியில் பேசினார்.

ராகுலும், அவரது தாயும் இப்போது கட்சியில் என்ன பங்கு வகிப்பார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல், அது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது... கார்கே தான் தெரிவிக்க வேண்டும். எனது பதவி பொருத்தவரை நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எனது பதவி மற்றும் நான் எப்படி பணியமர்த்தப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர் தீர்மானிப்பார் என்றார்.

இது சோனியாவுக்கும் பொருந்துமா என்ற கேள்விக்கு அவர் கூறுகையில்: அதை நீங்கள் கார்கேஜி மற்றும் சோனியா காந்திஜியிடம் கேட்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில், காங்கிரஸ் கட்சியின் இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவரிடம் தான் உள்ளது. எங்களுக்குப் புதிய தலைவர் வந்திருக்கிறார், காங்கிரஸ் கட்சி எப்படி முன்னேற வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட பல மூத்த தலைவர்கள் கார்கேவின் இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். ராகுல் மற்றும் பிரியங்காவும் கார்கேவுக்கு ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தரூரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

80 வயதான கார்கே- ஜக்ஜீவம் ராமுக்குப் பிறகு, சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் மற்றும் கடந்த 75 ஆண்டுகளில் தெற்கில் இருந்து காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் ஆறாவது தலைவர் ஆவார். பி பட்டாபி சீதாராமையா, என் சஞ்சீவ ரெட்டி, கே காமராஜ், எஸ் நிஜலிங்கப்பா மற்றும் பி வி நரசிம்மராவ் ஆகியோர் தெற்கில் இருந்து வந்த மற்ற தலைவர்கள்.

பழம்பெரும் கட்சிக்கு புது வாழ்வு புகுத்தி, தேர்தலில் புத்துயிர் அளிப்பது அவருக்கு கடினமான பணியாக இருக்கும். அக்டோபர் 26ஆம் தேதி கார்கே முறைப்படி பொறுப்பேற்கிறார்.

புதன்கிழமை, தனது வெற்றிக்குப் பிறகு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்கியதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்கே, காங்கிரஸ் தலைமையில் அவரது பதவிக்காலம் வரலாற்றில் பொறிக்கப்படும் என்று கூறினார்.

ராகுலின் தற்போதைய யாத்திரையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிவடையும் இடைவெளி மற்றும் அரசாங்கத்தால் பரப்பப்படும் வெறுப்பு ஆகியவை இந்தியா இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்று கூறினார்.

சோனியா மற்றும் ராகுலின் வழிகாட்டுதலை நாங்கள் தொடர்வோம். நாம் அனைவரும் தொழிலாளர்களைப் போல ஒன்றாக வேலை செய்ய வேண்டும். யாரும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர் இல்லை. நாம் அனைவரும் சமம். அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலுக்கும், ஜனநாயகத்தை அழிக்கும் சதிக்கும் எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். வகுப்புவாதம் என்ற போர்வையில், நாட்டின் ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நாம் அமைப்பை பலப்படுத்துவோம், இந்த சவால்களை எதிர்கொள்வோம்.

மோடி அரசு பேச மட்டும் தான் செய்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறை குடம் தான் கூத்தாடும். ஒரு சர்வாதிகாரியின் விருப்பு வெறுப்புகளுக்காக இந்த தேசத்தை பலியிட முடியாது என்பது எங்கள் நம்பிக்கை. நாசகார சக்திகளை நாம் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும்... நாம் அனைவரும் பாராளுமன்றம் முதல் வீதிகள் வரை போராட வேண்டும்... நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள்... ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னை காங்கிரஸின் தலைவராக செய்தீர்கள்... உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன், என்று கார்கே பேசினார்.

தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்தவுடன், தரூர் கார்கேவை வாழ்த்தினார் மற்றும் தனக்கு ஆதரவளித்த பிசிசி பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

கட்சிப் பிரதிநிதிகளின் முடிவே இறுதியானது, அதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தொழிலாளர்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பது பாக்கியம்.

எங்கள் புதிய தலைவர், கட்சியின் சக உறுப்பினர் மற்றும் மூத்தவர், அவர் போதுமான தலைமைத்துவத்தையும் அனுபவத்தையும் கட்சிக்கு கொண்டு வருவார். அவரது வழிகாட்டுதலின் கீழ், நாம் அனைவரும் கூட்டாக இணைந்து கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன், என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

தரூர் அணி, கடைசி நாள் வரை தேர்தலில் கடுமையாகப் போராடியது.

வாக்கு எண்ணிக்கையின் போதுகூட, அவர்கள் கட்சியின் தேர்தல் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதி, உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை நடத்துவதில் “மிகக் கடுமையான முறைகேடுகளை” சுட்டிக்காட்டினர். உ.பி.யில் இருந்து பெறப்பட்ட வாக்குகள் செல்லாதவையாகக் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

மிஸ்திரி, முடிவுகளை அறிவிக்கும் போது, ​​தரூர் முகாமில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறினார்.

இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பி. சசி தரூர், தான் ஒருபோதும் அதிருப்தி வேட்பாளராக இருக்கவில்லை, மாறாக மாற்றத்திற்காகத்தான் என்று கூறினார். கார்கேவின் வெற்றி காங்கிரசின் வெற்றி என்றார்.

இது ஒரு தனி நபரைப் பற்றியது அல்ல. நான் எனக்காக எதையும் விரும்பியதில்லை. இந்தியாவின் வலிமைக்கு முக்கியமான வலுவான காங்கிரஸைக் காண வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். அந்த உணர்வில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன், என்றார்.

அவர் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் தொண்டர்களிடையே உள்ள அதிருப்தியை பிரதிபலிக்கிறதா என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது: நான் அதிருப்தி வேட்பாளராக என்னை முன்னிறுத்தவில்லை. மாற்றத்திற்கான வேட்பாளராக நானே களமிறங்கினேன்.

கட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு அணுகலைத் திறந்துவிடுவது, விவாத மேடைகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவது,  உதய்பூர் சிந்தன் ஷிவிர் பிரகடனங்களை மட்டும் செயல்படுத்தாமல் மேலும் செயல்படுவது அவசியம் என்று நான் உணர்ந்தேன்.

கட்சியில் பயனுள்ள நிர்வாகத்திற்கு அனைத்து கட்சி தொண்டர்களும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை கார்கே தீவிரமாக கவனிப்பார். அதனால் வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக திறம்பட சவாலாக இருக்க முடியும் என்று நம்புகிறேன் என்று தரூர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment