'முடிவின் தொடக்கம் ஆரம்பமானது!' - கோரக்பூர் இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி

சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளதன் மூலம் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே, காலியாக இருந்த இவ்விரு தொகுதிகளுக்கும் மார்ச் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  அதே போன்று பீகார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் பாஜக வேட்பாளரைவிட சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

யோகி ஆதித்யநாத் எம்.பியாக இருந்த கோரக்பூர் தொகுதி தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுபோலவ உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூல்பூர் மற்றும் பிஹார் மாநிலம் அரேரியா தொகுதியிலும் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், “இது மிகப்பெரிய வெற்றி. மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எனது வாழ்த்துக்கள். முடிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ள உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், “புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம். எனினும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close