கிட்டத்தட்ட 26,000 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு மேற்கு வங்காளத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. நடந்து வரும் மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸை (டி.எம்.சி) குறிவைக்க எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கு அதிக வாய்புகளை வழங்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Decode Politics: Why Mamata Banerjee is on the back foot over a Calcutta HC order in school jobs scam
மால்டா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, டி.எம்.சி-யையும் முதல்வர் மம்தா பானர்ஜியையும் குறிவைத்து, “வங்காளத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கையுடன் டி.எம்.சி விளையாடியது. பெரிய அளவில் அரசு பணிக்கு ஆள்சேர்த்த மோசடி காரணமாக சுமார் 26,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். டி.எம்.சி-க்கு கடன் வாங்கி கொடுத்தவர்கள் (வேலை கிடைக்க) இப்போது சாலைகளில் இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுதான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.” என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய மம்தா பானர்ஜி, “மனிதர்களைத் தின்னும் புலிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால், வேலை தின்னும் பா.ஜ.க-வைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீதிமன்றத்தால் பலர் வேலையிழந்த பிறகு பா.ஜ.க, சி.பி.ஐ (எம்) மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
உயர்நீதிமன்றம் என்ன கூறியது?
கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 22-ம் தேதி உத்தரவில், நீதிபதிகள் டெபாங்சு பசக் மற்றும் ஷப்பர் ரஷிடி ஆகியோர் அடங்கிய அமர்வு, 25,753 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்து, “அனைத்து ஊதியங்கள் மற்றும் சலுகைகள் ... ஆண்டுக்கு 12% என கணக்கிடப்பட்ட வட்டியுடன் சேர்த்து... பெற்ற அனைத்து ஊதியங்களையும் சலுகைகளையும் திரும்பப் பெற வேண்டும், அவை பெறப்பட்ட நாளிலிருந்து டெபாசிட் செய்யப்படும் வரை ஆண்டுக்கு 12% வட்டியுடன், தேதியிலிருந்து நான்கு வாரங்களுக்குள் கணக்கிடப்படும்” என்று உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வேலைவாய்ப்பு மோசடி என்றால் என்ன?
நீதிபதிகள் ஹரிஷ் டாண்டன் மற்றும் ரவீந்திரநாத் சமந்தா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, பிப்ரவரி 22, 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் பாக் தலைமையில் ஒரு குழுவை அமைத்து பள்ளிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் போது இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த குழு தனது அறிக்கையை அந்த ஆண்டு மே 12-ம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், நீதிபதிகள் சுப்ரதா தாலுக்தார் மற்றும் ஆனந்த குமார் முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, பள்ளிக் கல்வித் துறையில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கான நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு அப்போதைய நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயின் உத்தரவை உறுதி செய்தது.
ஆகஸ்ட் 2022-ல் டி.எம்.சி தலைவரும் மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் அவரது நெருங்கிய உதவியாளருமான அர்பிதா முகர்ஜியும் முதல் உயர்மட்டக் கைதுகளில் அடங்குவர். ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம் சாட்டர்ஜியுடன் இணைக்கப்பட்டபோது, ஊடக வெளிச்சத்தின் முழு வெப்பத்தையும் டி.எம்.சி எதிர்கொண்டது. இதையடுத்து, அவரை மாநில அமைச்சரவை மற்றும் கட்சியில் இருந்து ஆளும் கட்சி நீக்கியது.
வடக்கு வங்க பல்கலைக்கழக துணைவேந்தர் சுபிரேஷ் பட்டாச்சார்யா, டி.எம்.சி எம்.எல்.ஏ மற்றும் மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா மற்றும் டிஎம்சி எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா உள்ளிட்ட மாநிலக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள் மேலும் கைது செய்யப்பட்டனர்.
அரசியல் ரீதியாக எப்படி எதிர்கொள்ளப்படுகிறது?
லோக்சபா தேர்தலுக்கு நடுவே வந்துள்ள இந்த உத்தரவு, அனைவரும் வேலை இழக்கக் கூடாது என்று கூறி சேதத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நாளில் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, “எல்லா தீர்ப்புகளையும் ஏற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். பா.ஜ.க-வின் அறிவுறுத்தலின்படி, தேர்தலுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
பா.ஜ.க மற்றும் பிற கட்சிகள் மேற்குவங்க அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்து, முதல்வரின் ராஜினாமாவைக் கோரின. இந்த ஊழல் தொடர்பான பல வழக்குகளில் நீதிபதியாக இருந்து தீர்ப்பளித்த பா.ஜ.க-வின் தாம்லூக் வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், “உண்மையான குற்றவாளிகள் மாநில நிர்வாகத்தின் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு தைரியமும் அவமானமும் இருந்தால், அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தங்கள் அதிகாரப் பதவிகளை விட்டுவிட்டு விசாரணைகளை எதிர்கொள்ளுங்கள்.” என்று கூறினார்.
இந்த வழக்கை எதிர்த்துப் போராடி வரும் சி.பி.ஐ (எம்) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, “நீதிமன்றம் விரும்பினால், அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்ய முடியும் மற்றும் ஊழல் அரசாங்கங்களின் முகமூடியை அவிழ்க்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சிலர் தங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது, ஆனால், ஊழல் கட்சியை ஆதரிப்பதன் விளைவுகளை அவர்கள் உணர வேண்டும்.” என்று கூறினார்.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு என்பது மேற்கு வங்கத்தில் ஒரு முக்கிய தேர்தல் திட்டமாகும். இது மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் டி.எம்.சி-யை விமர்சிக்க உதவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“