Mamata Banerjee: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளையில், ஆளும் பா.ஜ.க-வை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 5 பேர் கொண்ட குழு இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காங்கிரஸுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை என்றும், தேசியக் கூட்டணி குறித்து தேர்தலுக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும். வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசுகையில்,"நான் யாருடனும் பேசவில்லை, காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அவை எல்லாம் பொய். மாநிலத்தில் 2 தொகுதிகளை வழங்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. எனது ஆரம்ப முன்மொழிவு ஏற்கனவே அவர்களால் நிராகரிக்கப்பட்டது.
அதனால், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று எங்கள் கட்சி முடிவு செய்தது. ஆனால், நாங்கள் இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்குவங்கம் வழியாகத்தான் சென்றது. மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி' என்று எங்களுக்குத் தெரிவித்தீர்களா?. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுடன் இனி எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
தேசிய அரசியலில் நாங்கள் என்ன செய்வோம், என்ன செய்யாமல் இருப்போம் என்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு சிந்திப்போம். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, பா.ஜ.க-வை முறியடிக்க தேவையானதை செய்வோம். ஆனால், இப்போது தொகுதிப் பங்கீடு குறித்து எந்த விவாதமும் இல்லை.
மாநிலக் கட்சிகள் ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிடலாம் என்றும், 72 இடங்களில் மாநில கட்சிகள் போட்டியிடும் என்றும் கூறியுள்ளோம். அதில் காங்கிரஸ் தலையிடக் கூடாது. ஆனால் அது நடந்தால், என்ன செய்வது என்று பார்ப்போம்." என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: INDIA hits a wall in Bengal: Mamata says ‘no talks on with Congress… any alliance after polls’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“