நாட்டின் பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சி பாரம்பரிய நிகழ்வு என்பதால், இதில் தான் கலந்துகொள்ள இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது, பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிக்கட்சி என்ற சாதனையை நிகழ்த்தியது. எதிர்க்கட்சி அந்தஸ்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்த காங்கிரஸ் கட்சி, வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனையடுத்து, நாட்டின் பிரதமராக வரும் 30ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், மகாடி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மம்தா பங்கேற்பு : பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி பாரம்பரிய நிகழ்வு என்பதால், அதில் தான் கலந்துகொள்ள இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மற்ற மாநில முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வலியுறுத்துவேன் என்று அவர் மேலும் கூறினார்.
பாரதிய ஜனதா தடம் பதிக்காத மேற்குவங்க மாநிலத்திலும், இந்த மக்களவை தேர்தலில், பா.ஜ. தடம்பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. வாக்கு சதவீதம் 40.5 சதவீதம் ஆகும்.
ரஜினி உறுதி : மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.