நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, நாளை (30ம் தேதி) பதவியேற்க உள்ள நிகழ்வில், கலந்துகொள்ள போவதில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் புதிய பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு எனது வாழ்த்துகள். பிரதமராக பதவியேற்கும் விழா, பாரம்பரிய நிகழ்வு என்பதால், அதில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் வன்முறைகளில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 54 குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள செய்தியை, ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்து இப்போதுதான் அறிந்து கொண்டேன். அரசியல் வன்முறைகளில் அவர்கள் கொல்லப்பட்டதாக வெளியானது உண்மைக்கு மாறான தகவல். மேற்குவங்க மாநிலத்தில், அதுபோன்ற சம்பவங்களே நடைபெறவில்லை. தாங்கள் குறிப்பிட்ட நபர்களின் மரணங்கள் யாவும் சொத்து பங்கீடு, குடும்ப தகராறு உள்ளிட்ட உள்விவகாரங்களால் நடைபெற்றவை. இதனை அரசியலுடன் தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது.
என்னால், தங்கள் பதவியேற்பில் கலந்துகொள்ள இயலாததற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் மோடிஜி.
பாரம்பரிய நிகழ்வான பிரதமர் பதவியேற்பு விழாவை, ஒரு கட்சியின் மதிப்பை குறைக்கும் வண்ணம் மாற்றி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிக்கு நான் ஒருபோதும் துணைபோகமாட்டேன். என்று மம்தா பானர்ஜி அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு அழைப்பு ஏன்? : மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர, மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கும் வகையில் கட்சி தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றினார்கள். மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் அவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டும் வந்தனர். இதில் பலர் மரணமடைந்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகத்தை அங்கீகரிக்கும் பொருட்டு கட்சி தலைமை அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.என்று பாரதிய ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.