மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜிலிங் மலைப்பகுதியில் 10 கிலோமீட்டர் ஜாகிங்கில் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று. இந்த நிலையில், சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று 10 கிலோ ஜாகிங் செய்துள்ளார். இந்த நிகழ்வை மம்தா பானர்ஜி தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஜாகிங் நிகழ்ச்சி டார்ஜிலிங்கில் உள்ள குர்சியோங்கிலிருந்து மகாநதி பகுதி வரையான சாலையில் நடைபெற்றது. வீடியோவில் அவர் பாதுகாவலர்கள் அதிகாரிகள் சூழ ஜாகிங் செய்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இந்த ஜாகிங் பயணத்தின்போது, மம்தா பானர்ஜி உள்ளூர் மக்களுடன் உரையாடியதோடு அவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.
மம்தா பானர்ஜி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் “சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நமது கிரகத்தை காப்பாற்றுவதற்கும் எல்லா முயற்சிகளையும் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்போது, பசுமையைக் காப்போம். தூய்மையாக இருப்போம்” என்று டுவிட் செய்திருந்தார்.