மேற்கு வங்க அரசு அதிகாரிகள், சமீபத்தில் நடந்த கூட்டங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) நிலுவைத் தொகை மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக நடந்தன என்று கூறுகிறார்கள். ஆனால், எதிர்தரப்பினர், மம்தா பானர்ஜி, ஊழல் விசாரணைகளில் தற்காப்பு நிலையில் இருப்பதாகவும், மத்திய நிறுவனங்களை பின்வாங்க வைக்க முயற்சி செய்வதாகவும் கூறுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒன்று, டிசம்பர் 16-ம் தேதி அமித்ஷா மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு. இரண்டாவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய அமைப்புகளின் ரெய்டுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடியைக் குற்றம்சாட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்தது. மேலும், வருகிற வாரத்தில், கொல்கத்தாவில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக புதன்கிழமை அறிவித்தார். இந்த இரண்டு சம்பவங்கள்தான், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க-வின் முதல் இரண்டு பெரிய தலைவர்கள் மீதான தனது நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி மென்மையாக்குவது, மாநில அரசாங்கத்தின் நிதி நெருக்கடி மற்றும் மத்திய அரசின் நிதி உதவி இல்லாததால் அவரது கை கட்டபடுவதாக இருக்கலாம் என்ற ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளன.
மம்தா பானர்ஜியும் அமித்ஷாவும் டிசம்பர் 16-ல் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, மாநில செயலக கட்டிடமான நபன்னாவில் 14-வது மாடியில் உள்ள முதல்வர் அறையில் 15 நிமிட நேர சந்திப்பை நடத்தினர். அப்போது, மாநில நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், ஒரு பைசா கூட செலுத்தவில்லை… இந்த நிலுவைத் தொகை ரூ.6,000 கோடிக்கு மேல் உள்ளது. சனிக்கிழமையன்று, இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருக்கு மம்தா பானர்ஜி ஒரு கடிதம் அளித்தார். அவர்களின் சந்திப்பின் போது முதல்வர் மம்தா பானர்ஜி, உள்துறை அமைச்சரிடம் இந்த விஷயத்தை எழுப்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.
மாநிலத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு மாநில நிர்வாகத்தை பாதித்துள்ளதாகவும், தனது அரசாங்கத்தின் நிதிச்சுமையை குறைக்க பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் உதவியை முதல்வர் மம்தா பானர்ஜி பெற முயற்சி செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானதாகக் கூறப்படும், பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் விவகாரத்தில் இருந்து மம்தா பானர்ஜி பின்வாங்கி இருப்பதாகவும், மத்திய அமைப்புகளைப் பின்வாங்க வைக்கும் வகையில் பா.ஜ.க-வுடன் அரசியல் உடன்பாட்டை அடைய முயற்சி செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜி உட்பட பல கட்சித் தலைவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளனர்.
கடந்த செப்டம்பரில் சட்டமன்றத்தில் பேசிய மம்தா பானர்ஜி, அமித்ஷாவை மறைமுகமாகத் தாக்கிய அதே வேளையில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் விசாரணையைத் தொடங்குவதற்கு மோடிதான் காரணம் என்று மறைமுகமாகக் கூறினார். “சி.பி.ஐ, அமலாக்க இயக்குநரகம் பிரதமரின் கீழ் இல்லை. அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளன. மற்ற பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று கூறினார்.
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கடற்படை தளத்தில் டிசம்பர் 30-ம் தேதி நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னை அழைத்ததாக பானர்ஜி புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார். “நானும் அழைக்கப்பட்டிருக்கிறேன். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் எனக்கு போன் செய்து, நிகழ்ச்சிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நான் பிரதமருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், பிரதமர் நரேந்தர மோடி மேற்கு வங்கத்திற்கு வந்தே பாரத் ரயிலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், மம்தா பானர்ஜி டெல்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டபோது, பிரதமர் மோடியைச் சந்தித்து, மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். அதே நேரத்தில், மாநிலம் தொடர்பான பல பிரச்சனைகளை எழுப்பிய அவர், அடுத்த ஏப்ரலில் நடைபெறும் பெங்கால் உலகளாவிய வணிக கூட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்தார்.
மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க ஆர்வமாக உள்ளார். இப்போது பட்டவர்தனமாக தெரிந்துவிட்டது. இந்த இருவரால் மட்டுமே மூழ்கும் திரிணாமூல் காங்கிரஸ் கப்பலைக் காப்பாற்ற முடியும் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். மம்தா பானர்ஜி அதைச் சரியாகச் செய்கிறார்.” என்று கூறினார்.
மேற்கு வங்க மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா, அமித்ஷாவுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு மற்றும் பிரதமரை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றி அதிகம் கூற மறுத்துவிட்டார். “இது மிகவும் பலவீனமான திரைக்கதை என்று அவர் கூறினார். “மம்தா பானர்ஜி மக்களை குழப்ப விரும்புகிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸும், மம்தா பானர்ஜியும் மாறாததால் அவர் வெற்றி பெற மாட்டார்” என்று கூறினார்.
மம்தா பானர்ஜி அமித்ஷாவைச் சந்தித்து, அவரிடமும் பிரதமரிடமும் மேற்கு வங்கத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்ட போதிலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத்தை எச்சரிக்கையாக அணுகுவதை நிறுத்தவில்லை. சமீபத்தில் முடிவடைந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, மக்களவையில் கூடுதல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசை விமர்சித்தார். மத்திய அரசு திறமையற்றது என்று குற்றம் சாட்டிய மஹுவா மொய்த்ரா, தொழில்துறை உற்பத்தி, உற்பத்தித் துறை மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, - “இப்போது யார் பப்பு?” என்று பல கேள்விகளை எழுப்பினார்.
செப்டம்பரில், நிலக்கரி கடத்தல் வழக்கில், தன்னை அமலாக்க இயக்குனரகம் விசாரித்ததை அடுத்து, அபிஷேக் பானர்ஜி அமித்ஷாவைத் விமர்சித்தார். பா.ஜ.க-வின் மூத்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் இளைஞர் பிரிவு சமூக ஊடகங்களில் டி-சர்ட் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அமித்ஷாவின் புகைப்படம் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.