ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கம், சாவர்க்கர் உள்ளிட்ட விவகாரங்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிராக இருந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் சரியானது அல்ல. காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது. அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது. 370-வது பிரிவு நீக்கம் தற்காலிகமானது என நாங்கள் நம்புகிறோம்.
விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அவர்களின் கட்சி விவகாரம். காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் சாவர்க்கருக்கு எதிராக இருந்ததில்லை. அவரின் இந்து மத கருத்துகளுக்கு மட்டுமே, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதமாக இருந்துவருவதே தவிர, சாவர்க்கருக்கு அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், சாவர்க்கருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி தான் என்பதை யாராலும் மறுக்க இயலாது .
நாட்டு மக்களை, அவர்கள் சார்ந்த மதங்களின் அடிப்படையில் வேறுபடுத்தி காட்டுவதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வாக, இந்த பாரதிய ஜனதா அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தான் காண்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்களை பிரச்னைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு பயன்படாமல், அவர் இன்னார், இவர் இன்னார் என்று வேறுபடுத்தி நீக்குவதையே முக்கிய கருப்பொருளாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலின்படி, நீக்கப்பட்ட 19 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் முஸ்லீம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. உண்மை என்னவெனில், நீக்கம் செய்யப்பட்ட 19 லட்சர் பேரில், 12 லட்சம் பேர் பெங்காலி இந்துக்கள். இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு நிகழ்வுக்கு எதிரானவன் அல்ல.
370வது சட்டப்பிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது போன்ற மாயத்தையே, பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் உருவாக்கிவருவதாக மன்மோகன் சிங் மேலும் கூறினார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, 370வது சட்டப்பிரிவை நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தயாரா என்று சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.