புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா - வங்க தேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடந்தது. இதில், குறைந்தது 10 பேர் மரணமடைந்தனர்.
இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / புயல் எச்சரிக்கை பிரிவின் அறிவிப்பின் படி, மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இடையே சுந்தர்பான்ஸ் (மேற்கு வங்கம்) வழியாக கரையை கடக்கும் எனத் தெரிவித்தது . அப்போது காற்றின் வேகம் மணிக்கு 155 -165 கிலோ மீட்டராக இருக்கும். வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நபன்னாவில் (மாநில செயலகம்) கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஊடகங்களுடன் பேசிய மம்தா பேனர்ஜி,“குறைந்தது 10 முதல் 12 பேர் வரை இறந்துள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனா, ஹவுரா, கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், போன்ற மாவட்டங்கள் உம்பன் சூப்பர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த கோர சம்பவம் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சேதத்தை மதிப்பீடு செய்ய மூன்று (அ) நான்கு நாட்கள் ஆகும், ”என்று தெரிவித்தார் .
ஒருபுறம் கோவிட் 19 ஆபத்துடன் போராடி வருகிறோம், மறுபுறம் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வருகைக்கான முன்னேற்பாடுகளை தீவிரபடுத்தி வருகிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சூறாவளி. இது (ஆம்பான்) கோவிட் 19 ஐ விட பெரிய பேரழிவு என்று நான் நினைக்கிறேன். அரசியல் பேசாமல், எங்களுடன் இணைந்து செயல்பட்டு மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசை தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்,”என்று அவர் மேலும் கூறினார்.
இறந்தவர்களில் 13 வயதான லக்ஷ்மி குமாரியும் அடங்கும். ராஜ் சவுத்ரி லேனில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய இவர் மீது,கான்கிரீட் துண்டு விழுந்து . ஹவுரா மாநில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் வசிக்கும் நூர்ஜேஹன் பெவா என்பவரும் மரம் விழுந்ததால் உயிர் இழந்தார். மற்றொரு இளைஞர் வடக்கு 24 பர்கனாவில் ஒரு மரம் விழுந்ததில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் இன்னும் உறுதி செயவில்லை.
"இதுவரை, 5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அநேக மாவட்டங்களில் விவசாயம் பாதிப்படைந்தது. மின்சாரம் விநியோகம் சுத்தமாக முடங்கியது. மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன. பாலங்கள் மற்றும் தடுப்பணைகள் சேதமாகின. இன்னும், பல பகுதிகளோடு எங்களால் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை ”என்று கூறினார்.
சேதத்தை மதிப்பீடு செய்வதற்கும், நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஒரு சிறப்பு பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாகவும் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கூறுகையில், “அரசுப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்த பின்பு தான் முறையான பணிகள் தொடங்கும். சூறாவளியின் அழுத்தம் இன்னும் வடக்கு 24 பர்கனா பகுதியில் உணரப்படுகிறது. விவசாயம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, நீர், தங்குமிடம் போன்ற மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர், நிதியுதவி (அ) வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு வழியைப் பற்றி நாங்கள் சிந்திப்போம்,” என்று தெரிவித்தார்.
தலைநகர் கொல்கத்தாவில், மணிக்கு 69 கிமீ வேகத்துடன் தொடங்கிய உம்பன் புயல், மாலை 6.55 மணியளவில் மணிக்கு 130 கிமீ வேகத்தை எட்டியது. 07.30 மணியளவில் டம் டம் பகுதியில், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 133 கி.மீ- ஆக இருந்தது. கிழக்கு மிட்னாபூர், தெற்கு 24 பர்கானா மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2019 உருவான புல்பூல் சூறாவளியால் இதே பகுதிகள் பாதிப்படைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூறாவளி நிலைமையை கண்காணிக்க மாநில செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார் . கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், நகரத்தின் நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டார்.
கிழக்கு மிட்னாபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை மேலதிகாரிகளிடம் பேசிய முதல்வர், தேவைப்படும் உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பிப்பதார்.
சூறாவளி மேற்கு வங்க மாநிலத்தை கடந்து செல்ல 5 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொள்வதால், வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முடிவடையாத வரை சேதங்களையும், உயிர் இழப்புகளையும் அளவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.