அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவி முன்பு கீழ்த்தரமாக நடந்து கொண்ட முதியவர்! வீடியோவுடன் மாணவி புகார்

20 வயதான மாணவி ஒருவர், பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் சுய இன்பத்தில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார்

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஒருவர், பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் சுய இன்பத்தில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். டெல்லி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பான முழு வீடியோவை அம்மாணவி சமூக தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கடந்த பிப்ரவரி 7ம் தேதி டெல்லி அரசுப் பேருந்தில், அந்த மாணவி வீட்டிற்கு திரும்ப பயணித்து இருக்கிறார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வயதான நபர் ஒருவர், அப்பெண்ணுக்கு எதிராக திரும்பி அமர்ந்து இருக்கிறார். பின், தனது பையை மேலே வைத்து மறைத்து, அப்பெண்ணை பார்த்துக் கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்து பதறிய அந்தப் பெண், பேருந்தில் இருந்த பாதுகாப்பு அலாரத்தை அழுத்தி, அவரின் கீழ்த்தரமான செயல் குறித்து மற்ற பயணிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால், மற்றவர்களால் அதை உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பார்த்த அந்த முதியவர், அப்பெண்ணை அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டார்” என்று கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அப்பெண் வீடியோவாக பதிவு செய்து, பிப்ரவரி 8ம் தேதி சமூக தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close