பெண்கள் மட்டுமல்ல; இளைஞர்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் தலைமுடி இருக்கிறது. ஆனால் அது உதிர்ந்து வழுக்கை விழ ஆரம்பிக்கும்போது பல இளைஞர்கள் மன வேதனைக்கு ஆளாகின்றனர். இதனால் முடியை மீண்டும் வளர வைக்கும் நவீன சிகிச்சை முறைகளை நாடி செல்கின்றனர்.
அந்தவகையில், முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது முடி பராமரிப்புக்கான ஒரு நவீன மற்றும் மேம்பட்ட வழியாகும், இது ஒரு முடி நிபுணர் மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையின் கீழ் பிரத்யேக முடி பராமரிப்பு மையங்களில் செய்யப்படுகிறது.
இது தலையின் ஒரு பகுதியிலிருந்து அனைத்து நுண்குமிழ்கள் மற்றும் வேர்களை அகற்றி, வழுக்கையாக உள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்வதை உள்ளடக்கிய அறுவை சிகிச்சை முறையாகும்.
அப்படித் தான் டெல்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஆதர் ரஷீத் (30), தலையில் முடி கொட்டியதால் கடந்த ஆண்டு அங்குள்ள ஒரு கிளினிக்கில் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை செய்து கொண்டார்.
சிகிச்சை முடிந்த சில நாளிலே ரஷீத்துக்கு செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தக் கிருமித்தொற்று விரைவில் உடலில் பரவி ரத்தத்தில் நச்சுத் தன்மை ஏற்பட்டு உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் மோசமான ஒரு நோயாகும்.
ரஷீத்துக்கும் இதேபோலத்தான் காயங்கள் குணமாகாமல் அழுகி, ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து, சிறுநீரகங்கள் உள்பட ஒவ்வொரு உள் உறுப்புகளாக செயலிழந்து உள்ளன. ஒருகட்டத்தில் ரஷீத்தின் உடல்நிலை மிக மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து ரஷீத்தின் பெற்றோர், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த கிளினிக் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கின்றனர்.
ரஷீத்துக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை அளித்த இருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது மகன் மிகவும் கொடுமையான முறையில் மரணம் அடைந்ததாக வேதனை தெரிவித்த ரஷீத்தின் தாயார், இதுபோல ஒருசிலரின் மோசடி நடவடிக்கைகளால் வேறு எந்தத் தாயும் தங்களின் பிள்ளைகளை இழந்துவிடக்கூடாது என்று கண்கலங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“