ரூ.23,000, 24,000, 32,500 : ஜஸ்ட் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இது!

23,000 ரூபாய்க்கு சலான் கொடுத்துவிட்டு, வண்டி சாவியை வாங்கிக் கொண்டனர். சலான் கொடுத்த பிறகு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. நான் எனது வண்டியையே 15,000 - 18,000ற்குள் தான் வாங்கினேன்

By: Updated: September 4, 2019, 11:06:48 AM

Sakshi Dayal

புதிய மோட்டார் வாகன சட்டம் செப்.1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடிபோதையில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், சிறுவர்கள் கார் ஓட்டினால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரியானா மாநிலம் குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் ரூ.23,000 அபராதம் விதித்தனர். லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம், வாகனப்பதிவு சான்றிதழ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாததற்காக ரூ.2 ஆயிரம், காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.1,000 என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ‘சலான்’ வழங்கப்பட்டது. அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “டெல்லி கீதா காலனியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்கு டிரைவிங் லைசன்ஸ், பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், “காற்று மாசுப்படுத்துதல்”, ஹெல்மேல்ட் அணியாதது ஆகிய காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது. மதியம் 12.55 மணியளவில் இதற்கான சலான் வழங்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் ஹோண்டா ஏவியேட்டர் ஓட்டி வந்தார். அதன் ஷோ ரூம் விலை ரூ.55,000 ஆகும்” என்றனர்.

குர்கான் நீதிமன்றத்தில் பணிபுரியும் மதன் அங்கு செய்தித்தாள்களில் விளம்பரங்களை ஏற்பாடு செய்யும் பணியைச் செய்து வருகிறார். தேவையான அனைத்து ஆவணங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறிய மதன், ஆனால் அவற்றைத் கொண்டு வந்து கொடுக்க காவல்துறை போதுமான நேரம் கொடுக்கவில்லை என்றார்.

இதுகுறித்து பேசிய மதன், “நீதிமன்ற வளாகத்தை நெருங்குவதற்கு 15-20 மீட்டருக்கு முன்பு நான் ஹெல்மெட்டை கழட்டிவிடுவது வழக்கம். அன்று திங்கட்கிழமையும் அதைத் தான் செய்தேன். போலீசார் என்னை நிறுத்திய போது, என்னிடம் ஹெல்மெட் இருக்கிறது என்று சொல்லியும், அவர்கள் அதைக் கேட்க மறுத்துவிட்டனர்.

என்னிடம் 1000 ரூபாய் இல்லாததால், நீதிமன்றத்தில் இருந்து ஒருவர் மூலம் பெற்றுத் தருகிறேன் என்றேன்.

நான் டெல்லியில் வசிக்கிறேன். விரைவில் ஆவணங்கள் கொண்டு வந்து சேர்ப்பது என்பது முடியாத காரியம் என்றேன். ஆனால், அவர்கள் அதை கேட்கவில்லை. 23,000 ரூபாய்க்கு சலான் கொடுத்துவிட்டு, வண்டி சாவியை வாங்கிக் கொண்டனர். சலான் கொடுத்த பிறகு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. நான் எனது வண்டியையே 15,000 – 18,000ற்குள் தான் வாங்கினேன். அதனை விட அபராதத் தொகை அதிகம். ஆவணங்கள் கொண்டு வராதது எனது தவறு தான். ஆனால், என்னிடம் அனைத்தும் இருக்கிறது” என்றார்.

குர்கான் காவல்துறையின் மக்கள் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போகன் கூறுகையில், “அவரால் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடித்தால், அபராதத்தின் ஒரு பகுதியில் இருந்து அவருக்கு விலக்கு கிடைக்கலாம். ஆனால், ஹெல்மெட் அணியாததற்கு அவர் அபராதம் கட்டியாக நேரிடும். இதர அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படலாம்” என்றார். மேலும், திங்கட்கிழமை மட்டும் 950 சலான்கள் வழங்கப்படுள்ளதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு வழக்கில், குர்கான் பகுதியைச் சேர்ந்த ஜெய் நாராயண் என்பவருக்கு 24,000 அபராதமும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லைசன்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ், ஆபத்தான டிரைவிங் உள்ளிட்ட பலவற்றிற்காக 32,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Man from gurgaon fined rs 23000 violating traffic rules

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X