பிரதமர் அலுவலகத்தை போலியாக அணுகி, தனிப்பட்ட லாபத்திற்காக பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ் ராய் ‘ஷெர்பூரியா’, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் ஜம்மு & காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு ரூ.25 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
மனோஜ் சின்ஹா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இதை “பாதுகாப்பற்ற” கடன் என்று அறிவித்தார். மனோஜ் சின்ஹா 2014 இல் உ.பி., காஜிபூரில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் 2019 இல் அவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அப்சல் அன்சாரியிடம் தோல்வியடைந்தார்.
இதையும் படியுங்கள்: வெறுப்பு பேச்சு கட்டமைப்பை பாதிக்கும் கடுங்குற்றம்; உச்ச நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 2020 இல் மனோஜ் சின்ஹா ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மனோஜ் சின்ஹாவின் 2019 மக்களவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ஐந்து “பாதுகாப்பற்ற” கடன்களாக மொத்தம் ரூ.57 லட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் பிரகாஷ் ராய் ஷெர்பூரியாவிடமிருந்து பெற்ற கடன் மிக அதிகமாக உள்ளது. மற்ற நான்கு நபர்களிடமிருந்து பெற்ற கடன்கள் ரூ.3 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.8 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் ஆக உள்ளன.
1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காஜிபூரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சின்ஹா, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், அப்பகுதியில் அரசியல் ரீதியாக தீவிரமாக இருந்தார். ஆனால் ஜம்மு & காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தனது அரசியலமைப்பு பதவிக்கு ஏற்ப, அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ் சின்ஹாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விரிவான கேள்விகளை அனுப்பியது. அவர் பதில்கள் அளிக்கவில்லை, ஆனால் அவருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் மனோஜ் சின்ஹாவுக்கு 2015-16 முதல் சஞ்சய் பிரகாஷ் ராயுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
“துணைநிலை ஆளுநர் வெளிப்படையாக உள்ளார் மற்றும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பெறப்பட்ட பணத்தை பாதுகாப்பற்ற கடனாக அறிவித்துள்ளார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. மேலும், துணைநிலை ஆளுநர் “சஞ்சய் பிரகாஷ் ராயிடம் பணத்தைத் திரும்ப கொடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்”, ஆனால் சஞ்சய் பிரகாஷ் ராயை தொடர்புகொள்ள முடியவில்லை, என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

காஜிபூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பானுபிரதாப் சிங்கை தொடர்பு கொண்டபோது, சஞ்சய் பிரகாஷ் ராயிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
சஞ்சய் பிரகாஷ் ராய் பா.ஜ.க.,வின் உறுப்பினரோ அல்லது அலுவலகப் பொறுப்பாளராகவோ இல்லை. அவர் காஜிபூருக்கு வரும்போது எங்களைச் சந்திப்பார், ஆனால் அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பானுபிரதாப் சிங் கூறினார். வாரணாசியில் உள்ள முக்கிய பா.ஜ.க தலைவர் ஒருவர், அவர் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனை குறித்து பேசியதாவது: சஞ்சய் பிரகாஷ் ராய் மூத்த கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர் என்றும், அவர் இங்கு வரும்போதெல்லாம் உள்ளூர் கட்சித் தலைவர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil