ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் என்றும், அபுதாபியின் அரச குடும்பத்தின் ஊழியர் என்றும், தலைநகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலை ஏமாற்றி நான்கு மாதங்களுக்கும் மேலாக தங்கி பணம் செலுத்தாமல் வெளியேறிய நபரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
பில் லட்சக்கணக்கில் செல்கிறது. எம்.டி ஷெரீப் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் மீது ஆள்மாறாட்டம் மற்றும் திருட்டு குற்றங்களுக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் கடந்தாண்டு (2022) ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்துள்ளார் என்றும் யாருக்கும் தெரிவிக்காமல் வெளியேறியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், அந்த நபர் ஹோட்டல் அறையில் இருந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பிற பொருட்களை திருடியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் ஹோட்டலுக்கு ரூ. 23-24 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரின் பேரில் ஷெரீப் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புகாரின்படி, ஷெரீப் ஹோட்டல் அதிகாரிகளிடம், தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பதாகவும், அபுதாபியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானின் அலுவலகத்தில் பணிபுரிந்ததாகவும் கூறினார். அவர் போலி வணிக அட்டை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியுரிமை அட்டை மற்றும் பிற ஆவணங்களைத் தயாரித்ததாகவும், அவை இப்போது சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஹோட்டலில் அறை எண் 427 இல் பல மாதங்கள் தங்கியதும் தெரிகிறது.
இந்த நிலையில், நவம்பர் 20, 2022 அன்று ஹோட்டலில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு, நிலுவையில் உள்ள பில்களை செட்டில் செய்யாமலேயே ஹோட்டலை விட்டு ஓடியுள்ளார் என்று அந்த வழக்கின் FIR கூறுகிறது.
இது குறித்து புகார்தாரர் கூறுகையில், “நவம்பர் 22, 2022க்குள், அவர் சமர்ப்பித்த காசோலையின் மூலம் ஹோட்டல் நிலுவைத் தொகையைப் பெற்றுவிடும் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்ததால், இது முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.
இது ஷெரீப் தவறான நோக்கங்களையும், ஹோட்டல் அதிகாரிகளை ஏமாற்றும் தெளிவான நோக்கத்தையும் கொண்டிருந்ததை தெளிவாகக் குறிக்கிறது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/