உலகெங்கிலும், குறிப்பாக சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, “பாரத் ஜோடோ யாத்ராவை இடைநிறுத்த” அல்லது கோவிட் -19 நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
எவ்வாறாயினும், பா.ஜ.க 182 இடங்களில் 156 இடங்களை வென்று சாதனை படைத்த, சமீபத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது, அக்கட்சியின் முக்கிய பிரச்சாரத் திட்டம், கோவிட்க்கு எதிரான நரேந்திர மோடி அரசாங்கத்தின் "வெற்றிகரமான போராட்டத்தை" எடுத்துச் சொல்வதில் கவனம் செலுத்துவதாகும், இதன்மூலம் மற்ற நாடுகளில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் எப்படி "முகக்கவசங்கள் இல்லாமல் மக்கள் கூட முடியும்" என்பதை பா.ஜ.க விளக்கியது.
இதையும் படியுங்கள்: மீண்டும் கொரோனா: விமான நிலையங்களில் பரிசோதனை; மாஸ்க் அவசியம்
குஜராத் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிற மத்திய அமைச்சர்கள், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சி வேட்பாளர்கள் உட்பட, பா.ஜ., முக்கிய தலைவர்கள், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்குவதில் "பிரதமர் மோடியின் தொலைநோக்கு நடவடிக்கைகள்" குறித்து எடுத்துரைத்தனர்.
பிரதமர் மோடியே தனது ஒவ்வொரு உரையிலும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டாலும், பா.ஜ.க.,வின் பிரச்சாரகர்கள் மற்றும் வேட்பாளர்கள் "ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவைப் போலவே முகக்கவசங்கள் இல்லாமல் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரள்வதை உறுதி செய்ததற்காக" மோடியைப் பாராட்டினர்.
இருப்பினும், குஜராத்தில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது, அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறைகள் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி, பிரதமருக்கு அருகாமையில் உள்ள நபர்களை ஆர்.டி-பி.சி.ஆர் (RT-PCR) சோதனைக்கு உட்படுத்தியது, இருப்பினும் முகக்கவசம் கட்டாய ஆணையை மாநிலம் முழுவதும் எந்த தேர்தல் பேரணிகளிலும் அமல்படுத்தவில்லை.
நவம்பர் 19 அன்று வதோதராவின் பத்ராவில் நடந்த பேரணியில், மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, “கூட்டத்தைப் பாருங்கள், யாரும் முகக்கவசம் அணியவில்லை, நானும் அணியவில்லை... இரண்டு நாட்களுக்கு முன்பு, சீனாவில் ஒரு நகரத்தில் ஊரடங்கு போடப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. சீனா போன்ற ஒரு நாடு கோவிட் நோயிலிருந்து வெளிவர இருட்டில் தடுமாறி வரும் நிலையில், நீங்களும் நானும் இங்கே அமர்ந்து முகக்கவசங்கள் இல்லாமல் பெரிய கூட்டங்களை நடத்துகிறோம். காரணம் இரட்டை டோஸ் தடுப்பூசி மற்றும் பின்னர் ஒரு பூஸ்டர். இது அவ்வளவு எளிதில் நடக்காது. ஊரடங்கு நாட்களையும், நாம் இருந்த மோசமான சூழ்நிலையையும் நினைவில் கொள்ளுங்கள்... மோடிஜி நம்மை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தார்,” என்று கூறினார்.
ஜே.பி.நட்டா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சுகாதார அமைச்சராக இருந்த நாட்களை நினைவு கூர்ந்தார், மேலும் மோடிக்கு முந்தைய இந்தியா பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளை உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என்று பேசினார்.
நவம்பர் 18 அன்று பரூச்சில் உள்ள அங்கலேஷ்வரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, “பிரதமர் மோடியின் முயற்சியால்தான் இந்தியா கோவிட் -19 இல் இருந்து வெளியே வர முடிந்தது, இந்தியர்கள் முகக்கவசங்கள் இல்லாமல் சுற்றி வருகிறார்கள்… இல்லையெனில், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனாதிபதி ஜோ பிடன் கூட முகக்கவசம் அணிய வேண்டும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும், அமெரிக்காவின் பல பகுதிகளும் தங்களின் இரட்டை தடுப்பூசி அளவை முடிக்க முடியவில்லை, ஆனால் நாம் பூஸ்டர் டோஸின் நிலையை அடைந்துவிட்டோம்,” என்று கூறினார்.
நவம்பர் 22 அன்று பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள செஹ்ராவில் நடந்த பேரணியில் பேசிய ஜே.பி.நட்டா, “ஒரு காசநோய் தடுப்பூசி இந்தியாவை அடைய 25 ஆண்டுகள் ஆனது, டெட்டனஸ் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க 28 ஆண்டுகள் ஆனது மற்றும் ஜப்பானிய காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பெற ஒரு நூற்றாண்டு ஆனது. தடுப்பூசி ஜப்பானில் 1906 இல் தயாராக இருந்தது, ஆனால் 2006 இல் தான் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் பாருங்கள் ஏப்ரல் 2020 இல் கோவிட்-19 தான் வந்தது, மோடிஜி உடனடியாக ஒரு பணிக்குழுவை உருவாக்கினார். ஒன்பது மாதங்களுக்குள், நம்மிடம் ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகள் இருந்தன. காங்கிரஸார் வாக்கு கேட்க வரும்போது, அந்த தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்றும் பா.ஜ.க தடுப்பூசி என்றும் ஏன் கேலி செய்தீர்கள் என்று கேளுங்கள்... மோடிஜி உங்களுக்கு இன்னொரு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார்,” என்று கூறினார்.
மேலும், “ஐரோப்பாவால் கோவிட் நோயிலிருந்து வெளியே வர முடியவில்லை, ஆனால் இந்தியாவால் கோவிட் நோயைத் தடுக்க முடிந்தது. யாரும் முகக்கவசம் அணிந்து இவ்வளவு அருகில் உட்காரவில்லை. மோடிஜி கோடிக்கணக்கான மக்களுக்கு கொடுத்த தடுப்பூசியின் ‘சுரக்ஷா கவச்’ இது. அமெரிக்காவால் அதன் தடுப்பூசி திட்டத்தை முடிக்க முடியவில்லை... நாம் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம், அதில் 48 நாடுகள் நமது தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுள்ளன. நாம் பெறும் நாடு அல்ல, கொடுக்கும் நாடு, என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.
பிரதமர் மோடி, பிரச்சாரத்தின் போது தனது உரைகளில், "ஒரு பைசா கூட வசூலிக்கப்படாமல்" கிட்டத்தட்ட 80 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக பொதுமக்களிடம் சாட்சியம் கோரினார். பேரணியில் இருந்தவர்களிடம் அவர் கேட்டார்: “உங்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி கிடைத்ததா? டோஸ்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை தானே? இது உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதா? ஏனென்றால், உங்கள் மகன், டெல்லியில் அமர்ந்து, தொற்றுநோய்களின் போது உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுகிறேன்,” என்று கூறினார்.
நவம்பர் 23 அன்று தஹோத் மற்றும் வதோதராவில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். அந்த அதிகாரி, “கோவிட்-19 குறைந்திருக்கலாம், ஆனால் பிரதமர் மோடியின் வருகையைச் சுற்றியுள்ள சுகாதார நெறிமுறையின் ஒரு பகுதியாக, குறிப்பாக மேடைக்குச் செல்வோருக்கு ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகள் கட்டாயமாகும். இது தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து இடங்களிலும் உரிய கவனத்துடன் பின்பற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.