மங்களூருவில் நேற்று (நவ.19) ஓடும் ஆட்டோரிக்ஷாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு “தற்செயலானது அல்ல” மாறாக பயங்கரவாதச் செயல் என்று கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பிரவீன் சூட் ஞாயிற்றுக்கிழமை (நவ.20) தெரிவித்தார்.
சனிக்கிழமை, மங்களூருவில் ஓடும் ஆட்டோ ரிக்ஷா வெடித்ததில் தீ விபத்து, கடும் புகை ஏற்பட்டது. இதில், ஓட்டுநர் மற்றும் பயணி தீக்காயம் அடைந்தனர்.
இது குறித்து கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பிரவீன் சூட் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், “இது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல. ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயலாக இது உள்ளது. கர்நாடக மாநில காவல்துறை, மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல.
அடுத்த இரண்டு நாள்களில் இந்தச் செயலின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாம்” என்றார்.
இந்த நிலையில் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil