கர்நாடகா மாநிலம் மங்களூருரில் கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் காயமடைந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரிக் 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் ஷாரிக், குக்கரில் IED (ஐ.இ.டி) வகை குண்டு எடுத்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் விபத்தல்ல, தீவிரவாத தாக்குதல். பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடகா டிஜிபி பரபரப்பு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து என்.ஐ.ஏ மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஷாரிக் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள துங்கா நதிக்கரையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சோதனை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
தற்செயலான குண்டுவெடிப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பு, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பொறியியல் மாணவர்களின் உதவியுடன் ஐ.இ.டி குண்டை வெடிக்க முயற்சிப்பதாக தகவல் சேகரித்தனர்.
இதைதொடர்ந்து, குற்றப் பின்னணி கொண்ட முகமது ஜாபி என்கிற சார்பி (30) உட்பட உள்ளூர்வாசிகள் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜாபியிடம் விசாரணை மற்றும் அவரது கைப்பேசியை ஆய்வு செய்ததில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தகவல் மற்றும் எளிதான பொருட்கள் கொண்டு ஐ.இ.டி தயாரிப்பது எப்படி? என்ற வீடியோவும் இருந்துள்ளன.
ஜாபியை பயங்கரவாத தொடர்புக்கு உட்படுத்தியதன் பின்னணியில் ஷாரிக் இருந்ததை நாங்கள் அறிந்தோம். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷிவமொக்கா சம்பவத்தில்
ஷாரிக் குற்றஞ்சாட்டப்பட்டார். மேலும் அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஜாபிக்கு அந்த வீடியோவை ஷாரிக் அனுப்பியது என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஷாரிக்கின் கூட்டாளிகள் 2 பேர் மாஜ் அகமது மற்றும் சையத் யாசின், 21 வயதான பொறியியல் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தகப் பட்டதாரியான ஷாரிக், மங்களூருவில் உள்ள காவல் நிலையத்தின் சுவரில் அவதூறு வாசங்களை எழுதியதற்காக 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் சிறையில் இருந்தார். பின், வெளியே வந்து தலைமறைவானார். மாணவர் மாஜ் அகமதுவும் இதில் இணை குற்றவாளியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஷாரிக் ஜிஹாத்தின் கருத்துக்கள், தீவிரவாதம், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வாசகங்களை மெசஞ்சர் ஆப்ஸ் மூலம் அனுப்பி வந்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நிறுவனத்தின் டெலிகிராம் குரூப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் என்று ஷிவமொக்கா காவல்துறை செப்டம்பரில் தெரிவித்தது.
ஷாரிக் பகிர்ந்த வீடியோவை பார்த்து அந்த குழு ஆன்லைனில் டைமர் ரிலே சர்க்யூட்கள், பேட்டரிகள், சுவிட்சுகள், கம்பிகள், தீப்பெட்டிகள் மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளனர்.
ஷிவமொக்கா மாவட்டம் துங்கா நதிக்கரையில் உள்ள கெம்மங்குண்டி பகுதியில் ஷாரிக் குழுவினர் சோதனை முயற்சியாக, வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதில் வெற்றி பெற்றனர் என அம்மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
நவம்பர் 19-தேதி மாலை மங்களூருவில் ஷாரிக் குண்டை மறைத்து வைத்து எடுத்து சென்ற குக்கர் வெடித்தது. இந்த சம்பவத்திற்கு முன்பாகவே ஷாரிக்கை காவல்துறையினர் தேடி வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஷாரிக் கிரிப்டோ கரன்சி மூலம் நிதி பெற்று வந்ததாகவும், அதை சையத் யாசின் மூலம் இந்திய ரூபாயாக மாற்ற முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் தேடப்படும் நபர் அரபாத் அலி சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மங்களூரு வழக்கு தொடர்பாக ஷாரிக்கின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நவம்பர் 19-ம் தேதி மங்களூருவுக்கு ஐ.இ.டியுடன் ஷாரிக் சென்றதன் நோக்கும் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil