கொரோனா தொற்றை கணித ரீதியாக கணக்கிடும் வகையில் சூத்ரா (SUTRA) என்ற மாடலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வடிவமைத்தது. இதனை பல்வேறு கணிதவியலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கொரோனா எப்போது உச்சம் தொடும். பாதிப்புகள் எப்போது குறையும் என கணித ரீதியாக சில தகவல்களைப் பெறலாம்.
இதில் பணியாற்றும் ஆராய்ச்சியாளரும், ஐஐடி கான்பூர் பேராசிரியருமான மனீந்திர அகர்வால், ஜனவரி நடுப்பகுதியில் மும்பை,டெல்லியில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என்றும், இந்தியாவில் ஒரு நாளைக்கு நான்கு முதல் எட்டு லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த சூத்ரா மாடல் மற்றதை விட ஏன் துல்லியமானது என்பதை குறித்து பேசியுள்ளார். இந்த அமர்வை ஆசிரியர் அமிதாப் சின்ஹா நெறிப்படுத்தினார்.
அமிதாப் சின்ஹா: மூன்றாவது அலை எப்போது உச்சமடையும்? எவ்வளவு காலம் இந்த அலை நீடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மும்பையைப் பொறுத்தவரை, மூன்றாவது அலை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். அது வெகு தொலைவில் இல்லை. டெல்லியிலும் அதே நிலை தான் உள்ளது. தற்போதைய கணக்கீட்டின்படி, முழு இந்தியாவிற்கும் போதுமான தரவு இல்லாததால், அடுத்த மாத தொடக்கத்தில் அலை எங்காவது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். அளவுரு மதிப்புகள் வேகமாக மாறி வருவதால், பாதிப்பு உச்சம் எவ்வளவு இருக்கும் என்பதை சரியாக கண்டறியமுடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு நான்கு முதல் எட்டு லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்.
டெல்லி மற்றும் மும்பையில் பாதிப்புகள் எவ்வளவு வேகமாக உயர்கிறதோ அதே வேகத்தில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் பாதிப்பு தற்போது தான் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது உச்சம் பெற்று கீழே வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும். மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில், தொற்றுநோயின் மூன்றாவது அலை ஏறக்குறைய முடிவுக்கு வரும் என்றார்.
அமிதாப் சின்ஹா: தொற்றுநோய் அதிகளவில் சீரற்ற நிலையில் பரவும் சூழ்நிலையில், கணினி மாதிரியின் கணிப்புகள் எவ்வளவு நம்பகமானவை?
இயற்கையாகவே தொற்றுநோய்கள் மிகவும் சீரற்ற நிகழ்வுகள் என்பது உண்மைதான், ஆனால் சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபரும், பாதிக்கப்படாத நபரும் தொடர்பு கொள்ளும்போது தொற்று பரவுகிறது. இது மிகவும் எளிமையான பகுப்பாய்வு ஆகும். அதேபோல், பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகளவில் இருக்கும் போது, புதிய நோய் தொற்று பாதிப்பு அதிகளவில் உருவாகக்கூடும். ஏனெனில் அதிக இடமாற்றங்கள் நிகழலாம். நோய்த்தொற்று இல்லாதவர்கள் எவ்வளவு அதிகமாக இருப்பார்களோ, அவ்வளவு அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் உருவாக்கப்படுவார்கள்.இதன் அடிப்படையில், ஒருவர் ஒரு மாதிரியை உருவாக்குகிறார்.
அடிப்படை மாதிரி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது SIR மாதிரி என்று அழைக்கப்படுகிறது.பல தொற்றுநோய்களின் பாதையை கணிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உள்ளூர் நில விவரங்களை கணக்கிட, இந்த மாதிரியில் சில மாற்றங்களைப் மேற்கொண்டோம்.
எங்கள் சூத்ரா மாடலில், உள்ளீட்டுத் தரவிலிருந்தே அளவுருக்கள் அவற்றின் மதிப்புகளைக் கற்றுக்கொள்ள அனுமதித்துள்ளோம். எங்களுக்குத் தேவைப்படுவது தினசரி புதிய பாதிப்புகள் பதிவாகும் நேரத் தொடராகும். அந்த நேரத் தொடரிலிருந்து, எங்கள் மாடலுக்கு தேவையான அளவுரு மதிப்புகளை மதிப்பிட முடியும்.
மதிப்பீட்டைச் செய்யும்போது அளவுரு மதிப்புகள் மாறக்கூடாது. அப்படி மாறினால், நமது மதிப்பீடுகள் தவறாகிவிடும்.அளவுருக்கள் நிலைப்படுத்த மாடலுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் அளவுருக்கள் மாறும்போது, நாம் மீண்டும் கணக்கிட வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், உள்ளீட்டுத் தரவைத் தவிர, அளவுரு மதிப்புகளைக் கணக்கிடுவதற்கு மாடலுக்கு வேறு எந்தக் கணக்கீடும் தேவையில்லை. அது தரவுகளிலிருந்தே எடுக்கப்படுகிறது. பல மாடல்களால் முடியாத போது, கொரோனா பாதிப்பை கண்டறியும் பாதையில் நாங்கள் வெற்றிப்பெற்றுள்ளோம்
ஆசாத் ரஹ்மான்: லாக்டவுன் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
முதல் அலையில், மிகவும் கடுமையான லாக்டவுன் பரவல் வீதத்தை இரண்டு மடங்கு குறைத்தது. இரண்டாவது அலையின் போது, வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு உத்திகளைக் கடைப்பிடித்தன. கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்களால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது.
கடுமையான லாக்டவுன் எப்பொழுதும் அதிகமாக உதவுகிறது, ஆனால் அது பலரின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதிக்கும். கொரோனாவால் ஏற்படும் மரணங்களை பற்றி பேசுகிறோம். அதே சமயம், வாழ்வாதார இழப்பால் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பேச வேண்டும்.
ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் உச்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் நகரங்களுக்கு, லாக்டவுன் அவசியமில்லை. அதே சமயம், தற்போது லாக்டவுனை அமலப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிப்பு வளர்ச்சி கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
உங்கள் மருத்துவமனை அல்லது மருத்துவ கட்டமைப்பால் பாதிப்பை கையாள முடிந்தால், அதை வளர அனுமதிப்பது பயனுள்ள உத்தியாக இருக்கலாம். அதிவேகமாக பரவி, அதே வேகத்தில் குறைந்துவிடும். இது, அனைத்து தொற்று உறுதியாகி மீண்டு வருவதற்கான நேரத்தை குறைக்கிறது. ஆனால், அத்தகைய சூழ்நிலையில், தீவிர அழுத்தத்தை சமாளிக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும்.
ரித்திகா சோப்ரா: சூத்ரா மாதிரி எப்போதும் துல்லியமான கணிப்புகளை வழங்குவதில்லை. அதை மேம்படுத்தி வருகிறீர்களா?
மாடலை மேம்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம். மாடலின் ஒரே குறைபாடு என்னவென்றால், அளவுரு மதிப்புகள் மாறும் போது, அவற்றின் இறுதி மதிப்பு என்னவாக இருக்கும் என்று கணிப்பதற்கான வழியில்லை. மிகவும் மேம்பட்ட பகுப்பாய்வின் மூலம் அந்த வகையான கணிப்புக்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்போது, அதைச் செய்வதற்கு யாருடைய உதவியையும் பெற நிச்சயமாக விரும்புகிறோம்.
அமிதாப் சின்ஹா: இந்தியாவில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 4 முதல் 5 மில்லியன் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு பெரிய எண்கள் பதிவுகளில் இருந்து முற்றிலும் காணாமல் போகலாம் என்று நினைக்கிறீர்களா?
இது சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மரணங்கள் முழுமையாக பதிவாகாமல் போகும் கற்காலத்தில் நாம் வாழவில்லை. பல மாநிலங்களில் மயானங்கள் நிரம்பியிருப்பதாகவும், வெளியே நீண்ட வரிசைகள் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. ஆனால் அது மிகவும் குறைவான காலம் தான். இரண்டாம் அலையில் கொரோனா உச்சமடைந்த சமயத்தில், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தான் இருந்தது.
தொற்றுநோயின் முழு காலக்கட்டத்தையும் நீங்கள் சராசரியாகக் கணக்கிடும்போது, இறப்புகளின் தாக்கம் அதிகமாக இருக்காது. எனவே, இறப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதை விட 10 மடங்கு இருக்கும் என்று நம்புவது மிகவும் கடினமாக உள்ளது. வேண்டுமானால், 2 அல்லது 3 மடங்கு மட்டும் இறப்பு எண்ணிக்கை அதிகளவில் இருந்திட சாத்தியம் உள்ளது.
அமிதாப் சின்ஹா: இறப்பு நிகழ்வுகளில் முக்கிய விவாதங்களில் ஒன்று உ.பி.யில் காணப்பட்ட மிதக்கும் உடல்கள் ஆகும். இது மாநிலத்தில் இறப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால், உ.பி., அரசு கோவிட் தொற்றுநோயைக் கையாண்டதை நீங்கள் பாராட்டினீர்கள். உ.பி அரசு தொற்றுநோயைக் சிறப்பாகக் கையாண்டது என நீங்கள் பரிந்துரைத்தது ஏன்?
மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை பார்க்காமல், ஒரு மாநிலத்தின் செயல்திறனை வேறு சில மாநிலங்களின் செயல்திறனுடன் ஒப்பீடுவதை காண முடிந்தது. உ.பி.யில் பல மரணங்கள் நடந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. நானும் உ.பி.யில் பிரயாக்ராஜிலிருந்து தான் வருகிறேன்.
என்னுடைய குழந்தைப் பருவத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதை பார்த்திருக்கிறேன். எனவே, இது ஒரு புதிய நிகழ்வு அல்ல.ஆனால், இம்முறை எண்கள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உபி.,யில் பல ஏழை மக்கள் உள்ளனர். அவர்களுக்கு உடலை தகனம் செய்வதற்கான பணமோ அல்லது வழியோ கிடைத்திருக்காது. இதனால்தான் கங்கையில் உடல்களை போடும் பணியில் ஈடுபட்டனர்.
சுகாதார உள்கட்டமைப்பு வைத்து தான் உ.பி.யின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். இத்தகைய சுகாதார உள்கட்டமைப்புடன் தொற்றை கையாள தொடங்கினால், நீங்கள் முற்றிலும் பேரழிவை சந்திக்க நேரிடும். ஆனால், அது நடக்கவில்லை என்பது தான் உண்மை.எனவே, அதனை கையாண்ட விதத்தை பாராட்டி நன்றி தெரிவித்தோம் என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.