மணிப்பூரின் சாங்கோபங் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படுகாயமடைந்த வீரர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
"மணிப்பூர் ஆளுநர், ஸ்ரீ அஜய் குமார் பல்லா, சேனாபதி மாவட்டத்தின் சாங்கோபங் கிராமத்தில் நடந்த விபத்தில் மூன்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறார்" என்று ராஜ் பவன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.