இந்த ஆண்டின் கடைசி நாளில், மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங், 2023 மே 3 முதல் தனது மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு "வருத்தம்" மற்றும் "மன்னிப்பு" தெரிவித்தார். இந்த வன்முறையில் குறைந்தது 258 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக இருந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Manipur CM Biren Singh caps 2024 with an apology: ‘I feel regret and I want to say sorry to the people of the state’
“இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை நடக்கிறவைகளுக்கு நான் வருந்துகிறேன். மேலும், மாநில மக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று பிரேன் சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆனால், இப்போது, கடந்த 3-4 மாதங்களில் அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு, வரும் 2025-ம் ஆண்டு புத்தாண்டில், மாநிலத்தில் இயல்பு நிலையும், அமைதியும் திரும்பும் என நம்புகிறேன்” என்று பிரேன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
“மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் - என்ன நடந்ததோ அதுவே நடந்துள்ளது. கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையை, அமைதியான மணிப்பூரை, வளமான மணிப்பூரைத் தொடங்க வேண்டும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட 34-35 பழங்குடியினருடன் ஒன்றாக வாழ்கிறோம், எதிர்காலத்திலும் நாம் ஒன்றாக வாழ வேண்டும்” என்று பிரேன் சிங் கூறினார்.
பிரேன் சிங்கின் இந்த கருத்துகள் மணிப்பூர் மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றைக் கண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வந்துள்ளன, மேலும், இந்த வன்முறை அவரது தலைமைக்கு இன்னும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 11 நாட்களில், மணிப்பூர் மாநிலத்தில் வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர், நவம்பர் 11-ம் தேதி ஜிரிபாமில் உள்ள நிவாரண முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வன்முறையானது, இதில் 8 மெய்தி இன மக்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நடந்த மாபெரும் போராட்டங்களில், இம்பாலில் உள்ள முதல்வர் வீடு உட்பட, பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இதற்கு பிறகு, என்.டி.ஏ கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி பிரேன் சிங் அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. மேலும், பா.ஜ.க-வில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது.
மோதலுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அவரது "திட்டம்" பற்றி செவ்வாய்க்கிழமை கேட்டபோது, பிரேன் சிங் கூறினார், “மோதலை எவ்வாறு தீர்ப்பது என்பது உரையாடல் ஆகும். வன்முறையை விட்டுவிட வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் குறிவைக்கக் கூடாது. குறைகள் எதுவாக இருந்தாலும் விவாதம் மற்றும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது மற்றும் மாநில அரசும் பல்வேறு நிலைகளில் (உரையாடல்) தொடங்கியுள்ளது. மேலும், மக்களின் ஆதரவுடன் அமைதி திரும்பும் என நம்புகிறேன்” என்றார்.
பிரேன் சிங்கின் இந்த கருத்துக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “19 மாதங்களாக, முதல்வர் எதுவும் சொல்லவில்லை... ஆனால், இன்று முதல்வர் என்ன சொன்னார் என்பது கேள்வி அல்ல. 19 மாதங்களாக மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் ஏன் மவுனம் கலைக்கவில்லை என்பதுதான் கேள்வி. அவர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? அங்குள்ள எம்.எல்.ஏ-க்களை ஏன் சந்திக்கவில்லை? அங்குள்ள அரசியல் கட்சிகளை அவர் ஏன் சந்திக்கவில்லை? அவர் ஏன் அங்குள்ள மக்களை சந்திக்கவில்லை? முதல்வர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அவர் வெறும் பொம்மை. மணிப்பூரில் உண்மையான தோல்வி பிரதமருக்கு தான்.” என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில், வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பகிர்ந்து கொண்டார். 12,000-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 600-க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5,600 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மற்றும் 35,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த 2,058 குடும்பங்கள் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய பகுதிகள் உட்பட அவர்களது சொந்த வீடுகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மணிப்பூரின் தேசிய நெடுஞ்சாலைகளில் வன்முறையைத் தடுக்க, மாநிலம் என்.எச்-2 (இம்பால்-திமாபூர்) மற்றும் என்.எச்-37 (ஜிரிபாம் வழியாக இம்பால்-சில்சார்) ஆகிய இடங்களில் 17-18 கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இருந்து வரும் பயணிகளைப் பாதிக்கும் உயர் விமானக் கட்டணங்களை நிவர்த்தி செய்ய, மாநில அரசு ரூ. 5,000-க்கு மிகாமல் மலிவு விலையில் அலையன்ஸ் ஏர் சேவையைத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். விமானக் கட்டணம் அந்தத் தொகையைத் தாண்டினால், அரசு மானியம் வழங்கும் என்று பிரேன் சிங் கூறினார்.
இம்பால்-குவஹாத்தி, இம்பால்-கொல்கத்தா மற்றும் இம்பால்-திமாபூர் வழித்தடங்களில் வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவை இயக்கப்படும்.
மாநிலத்திற்குள் மக்கள் "சட்டவிரோதமாக ஊடுருவல்" பிரச்சினைக்கு தீர்வு காண, ஆதார் இணைக்கப்பட்ட பிறப்பு பதிவு ஜனவரி 2025 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் கூறினார். முதற்கட்டமாக மூன்று மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பிறப்பு பதிவு கட்டாயமாக்கப்படும், மேலும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பித்தல் தேவைப்படும் என்று பிரன் சிங் கூறினார்.
“மணிப்பூரின் சில மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் 420% மக்கள்தொகை அதிகரிப்பைக் கண்டறிந்த பிறகு இந்த முயற்சி எடுக்கப்பட்டது” என்று பிரேன் சிங் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“