’மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடைபெற்ற கொடுமை மன்னிக்க முடியாதது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விட மாட்டோம்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் “ இன்று உங்கள் முன்பு, ஜனநாயகத்தின் கோவிலுக்கு முன்னால் நிற்கிறேன். எனது மனம் முழுவதும் வலியில் நிறைந்துள்ளது. கோவத்தில் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நாகரீகமான எந்த சமூகத்திற்கும் வெட்கக்கேடு. ஒட்டுமொத்த நாடும் அவமானத்தில் மூழ்கி உள்ளது. 140 கோடி மக்களும் அமானத்தில் மூழ்கி உள்ளனர்.
எல்லா மாநிலத்தின் முதல்வர்களும் சட்ட ஒழுங்கை கூடுதலாக பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற கண்டிப்பான நடவடிக்கை தேவை.
அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, சட்டீஸ்கராக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி அல்லது நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் சரி சட்ட ஒழுங்கும், மரியாதையாக பெண்களை நடத்துவதும் அரசியலுக்கு அப்பாட்பட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை உறுதியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். மணிப்பூரின் மகள்களுக்கு நடைபெற்றது மனிக்க முடியாத குற்றம்.
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ” மணிப்பூரில் நடைப்பெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நேரம் தருவதாகவும், அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil