மணிப்பூரில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியான ஒரு நாள் கழித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) வியாழன் அன்று பிரச்சினையை கவனத்தில் எடுத்து, மணிப்பூர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரலிடம் நிலைமை குறித்து அறிக்கை கேட்டது.
மணிப்பூரில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியான ஒரு நாள் கழித்து, இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரேம் ஹெரோடாஸ் மெய்டே கைது செய்யப்பட்டார், மற்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘போலீசாரால் அந்த கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டோம்’: பாதிக்கப்பட்ட இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மணிப்பூர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ”சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களின் விசாரணையின் நிலை, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பிற காயமடைந்த நபர்களின் உடல்நிலை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள்/ குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் ஏதேனும் இருந்தால், அது போன்றவற்றை அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும்” என்று ஆணையம் கூறியுள்ளது.
மேலும், ”இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களில் இருந்து குடிமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட / எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் அறிய விரும்புகிறது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி. மிசோராமின் உச்ச பெண்கள் அமைப்பான Mizo Hmeichhe Insuihkhawm Pawl (MHIP) வியாழன் அன்று NHRC க்கு கடிதம் எழுதியது.
சுப்ரீம் கோர்ட்டும் இந்த வீடியோ குறித்து "ஆழ்ந்த கவலையை" தெரிவித்ததுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களை கேட்டுக் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil