குக்கிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக சில மெய்தி குழுக்களின் எதிர் அணிதிரட்டலால், குக்கி போர் நினைவுச்சின்னம் எரிக்கப்பட்டது, சில மாவட்டங்களில் பெருந்திரளான குக்கிகள் ஒன்று கூடுவதற்கு மாநில காவல்துறை தாமதமாக எதிர்வினையாற்றுவதும், சமீப காலமாக இரு சமூகத்தினரிடையே ஒருவரையொருவர் பற்றிய கவலை அதிகரித்து வருவதும்- இவைதான் மணிப்பூர் இப்போது பார்க்கும் வன்முறையில் விளைந்த சில காரணிகள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்பாலில் சிக்கலை எதிர்பார்த்து இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற புரிதல் டெல்லியிலும் உள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
மாநில அரசு வியாழன் அன்று குக்கி சமூகத்தை சேர்ந்த டிஜிபி பி டவுங்கலை, காவல்துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக்கி, கூடுதல் டிஜிபி (உளவுத்துறை) அசுதோஷ் சின்ஹாவிடம் பொறுப்பை ஒப்படைத்தது, அவர் முதல்வர் என் பிரேன் சிங்கிடம் நேரடியாக அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
மணிப்பூரில் இருந்து வரும் ஆதாரங்கள் படி, தற்போது குக்கி சமூகத்தின் மாணவர் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மணிப்பூரின் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம், மாநிலத்தின் பல மலை மாவட்டங்களில் மெய்தி சமூகத்தின் ST அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக சில காலமாக போராட்ட ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
மே 3ஆம் தேதி, 80,000க்கும் அதிகமான மக்களுடன், அத்தகைய பெரிய பேரணி ஒன்று சுராசந்த்பூரில் நடைபெற்றது. இது குக்கி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டம் ஆகும்.
இந்த அணிவகுப்புகளால் பதற்றமடைந்த மெய்தி மக்கள் பின்னர் தங்கள் சொந்த எதிர்ப்புகளை ஏற்பாடு செய்தனர்.
புதன்கிழமை (மே 3) மாலை, குக்கிகளின் போர் நினைவுச்சின்னம் மெய்திகளால் எரிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குக்கி குழுவின் கோபம் கொதித்தது. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆயுதமேந்திய குழுக்களின் தாயகமாக இது இருப்பதால், அப்பகுதியில் கிடைத்த துப்பாக்கிகளின் அளவு அதை இன்னும் மோசமாக்கியது என்று அந்த அதிகாரி கூறினார். இவ்வாறு மோதல்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.
அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், மெய்தி மற்றும் குக்கி இடையேயான பிரச்சனை நன்கு அறியப்பட்டதாகும். சமீப காலமாகவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறான கூட்டம் நடக்கும் போது, போலீசார் இன்னும் வேகமாக செயல்பட்டிருக்கலாம். எதிர்ப்பாளர்களின் போராட்டங்களை தடுத்து, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை உறுதி செய்வதே எப்போதும் வடகிழக்கில் உள்ள சிறந்த தீர்வு.
இம்பால் மற்றும் கிழக்கு சுராசந்த்பூரில் சிறிது பதற்றத்தைத் தணித்து, ராணுவம் மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படைகளின் (CAPFs) உதவியுடன் நிலைமை இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்பால் பகுதிகளில் சிக்கியுள்ள தங்கள் சமூகத்தினர் பாதுகாப்புக்குள் வரும் வரை, குக்கி குழுக்கள் வெளியே வர வர அனுமதிக்காத நிலையில், சில மெய்திகள் துணை ஆணையர் அலுவலகத்தில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
புதன்கிழமை முதல் நிலைமையை கண்காணித்து வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ளிக்கிழமையும் முதல்வர் பிரேன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிலைமையை ஆய்வு செய்தார்.
சமீபகால கொந்தளிப்பை தவிர, மாநிலத்தில் பிற பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. மியான்மரில் ராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் நாட்டிலிருந்து அகதிகள் கணிசமான அளவில் குவிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் அகதிகளுடன் இன ஒற்றுமையைப் பகிர்ந்துகொள்வதால், புதிய குடியேறியவர்களுக்கு உள்ளூர் மக்களிடமிருந்து சிறிய எதிர்ப்பு உள்ளது. சுராசந்த்பூர் போன்ற மாவட்டங்களில் குடியேறியவர்களில் பெரும்பாலானோர் குக்கி அகதிகள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
குக்கி தலைவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மாநிலத்திற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிப்பதாக மெய்தி சமூகத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மார்ச் மாதம் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபல் மாவட்டங்களில் பிஜேபி அரசாங்கம் மேற்கொண்ட வெளியேற்றும் நடவடிக்கை, குக்கிகளின் எதிர்ப்புக்களுக்கும், காவல்துறையுடன் ஏற்பட்ட மோதல்களுக்கும் வழிவகுத்தது.
அதே மாதம், மணிப்பூர் அமைச்சரவை குக்கி தேசிய இராணுவம் (KNA), குகி புரட்சிகர இராணுவம் (KRA) மற்றும் ஜோமி புரட்சிகர இராணுவம் (ZRA) உடனான செயல்பாட்டு இடைநிறுத்தம் (SoO) ஒப்பந்தங்களில் இருந்து உடனடியாக விலகுவதற்கான முடிவை எடுத்தது.
மத்திய அரசு இதை ஆதரிக்கவில்லை என்றாலும், இந்த அமைப்புகள் மியான்மர் குடிமக்கள் வருகையை ஆதரிப்பதாகவும், கசகசா சாகுபடி மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாகவும், வெளியேற்றும் இயக்கங்களுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதாகவும் மாநில அரசாங்கத்தின் கவலையைப் பகிர்ந்து கொண்டது.
இந்த நடவடிக்கைகள் குக்கி மக்களை கோபப்படுத்தினாலும், ST அந்தஸ்துக்கான மெய்தி கோரிக்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது மேலும் கொந்தளிப்புக்கு வழிவகுத்தது.
மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில், நாகாலாந்திலும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, அங்கு அன்றைய மாநில அரசு, மத்திய ஆயுதப் போலீஸ் படைகளை (CAPF) வெளியேற்றும் இயக்கத்திற்கு உதவுமாறு கோரியது.
ஆனால், இது மோதலுக்கு வழிவகுக்கும் என்பதால், இயக்கத்தை கைவிடுமாறு மாநில அரசை மத்திய அரசு வற்புறுத்தியது. இந்த விவகாரம் தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெய்தி சமூகத்தின் ST அந்தஸ்து கோரிக்கையில், மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட உணர்வுகளை அறிந்திருக்கிறது, இது ஒவ்வொரு தேர்தலிலும் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதியாக இருந்தாலும், மாநில அரசுகள் ஒருபோதும் அத்தகைய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்புவதில்லை என்பது சமூகத்தின் தொடர்ச்சியான புகார்.
மெய்தி சமூகத்துக்கு ST அந்தஸ்து வழங்கும் நாளில் குக்கி மற்றும் நாகா சமூகம் எதிர்ப்பு தெரிவிக்கும். மேலும், பழங்குடியினர் அந்தஸ்து குறித்து மெய்தி சமூகத்திற்குள் ஒருமித்த கருத்து இல்லை, ஏனெனில் பலர் தாங்கள் ஆளும் வர்க்கம் என்றும் பழங்குடியினர் பட்டியலில் இருப்பது அவர்களின் சமூக அந்தஸ்தை பாதிக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள், என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.