மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகி வரும் நிலையில், இரண்டு குக்கி-ஜோமி பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர், அவர்கள் 'போலீசாரால் அந்த கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக" பரபரப்பு தகவலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில், ஒருவருக்கு 20 வயது மற்றும் மற்றொருவருக்கு 40 வயது ஆகும். மே 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் புகாரில், பாதிக்கப்பட்ட இளம் பெண் "பகல் நேரத்தில் கொடூரமான அந்த கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டதாக" குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த புகாரில், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை ஒரு கும்பல் தாக்கிய பின்னர், அவர்கள் தஞ்சம் அடைய காட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், பின்னர் தௌபல் போலீசாரால் தங்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலீசாருடன் சென்ற அவர்களை வழிமறித்த அந்த கும்பல் காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் போலீசாரிடம் இருந்து அவர்களை கைப்பற்றியதாகவும் கூறியுள்ளார்.
தனது கணவரின் வீட்டின் தொலைபேசியில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அந்த இளம் பெண், “எங்கள் கிராமத்தைத் தாக்கும் கும்பலுடன் போலீசார் இருந்தனர். வீட்டுக்கு அருகிலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டுபோய், கிராமத்திலிருந்து சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று, கும்பலுடன் எங்களை சாலையில் விட்டுச் சென்றது போலீஸ். நாங்கள் போலீசாரால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்." என்று குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில், அவர்களில் ஐந்து பேர் ஒன்றாக இருந்ததாகக் கூறியுள்ளனர்: வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்கள், 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்மணியும் கழற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இளம் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் அந்த கும்பலால் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"எல்லா ஆண்களும் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் அவர்கள் செய்ததைச் செய்த பிறகு, நாங்கள் அங்கேயே விடப்பட்டோம், நாங்கள் தப்பித்தோம்," என்று கூறினார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்தை பதிவு செய்யும் வீடியோ இருப்பது தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
"மணிப்பூரில் இணைய வசதி இல்லை, எங்களுக்குத் தெரியாது," என்றும், அந்த கும்பலில் "அதிகமான" ஆண்கள் இருந்தபோதிலும், அவர்களில் ஒரு சிலரை தன்னால் அடையாளம் காண முடிந்தது. அதில் ஒருவன் தனது சகோதரனின் நண்பன் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதை அரசு உறுதிப்படுத்தியது. மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.