இரண்டு மணிப்பூரி பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அணிவகுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டு குக்கி-ஜோமி பெண்களைக் கடத்தி, கற்பழித்து கொலை செய்ததாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில்- அதே காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கிலும், எஃப்.ஐ.ஆர், இம்பாலின் கிழக்கில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. இப்போது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக, புகாரைப் பதிவு செய்த குடும்பத்தினர் விசாரணையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது தங்களுக்குத் தெரியாது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. விசாரணையின் நிலை குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் சிங் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இம்பால் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சிவகாந்தா அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
எந்தவொரு காவல் நிலையத்திலும், குற்றம், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு நடந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல் பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்படலாம்.
(அதிகார வரம்பினால் கட்டுப்படுத்தப்பட்ட எஃப்.ஐ.ஆர் போலல்லாமல், குறிப்பிட்ட காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றம் நடந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும். எஃப்ஐஆர்களுக்கு வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டாலும், பூஜ்ஜிய எஃப்ஐஆர்களுக்கு '0' எண் ஒதுக்கப்படும்.)
மணிப்பூரில், வன்முறையின் போது குடும்பங்கள் இடம்பெயர்ந்ததால் அல்லது அவர்களது உறவினர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் காயமடைந்ததால் அல்லது கொல்லப்பட்டதால் இதுபோன்ற பல FIRகள் பதிவு செய்யப்பட்டன.
மே 16 அன்று, 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளம் குக்கி-ஜோமி பெண்களின் மரணம் தொடர்பாக அவர்களின் சொந்த மாவட்டமான காங்போக்பியில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இளம் பெண்ணின் தாயின் புகாரின் அடிப்படையில், கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது..
இம்பாலில் கிழக்கில் கார் கழுவும் இடத்தில் பணிபுரிந்த இரண்டு இளம் பெண்கள், மே 5 ஆம் தேதி, சில அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிப்பு மற்றும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு, அவர்களது வாடகை வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர், அவர்கள் 100- 200 பேர் வரை இருக்கலாம், என்று புகாரில் தாய் கூறியிருந்தார்.
இந்த எஃப்ஐஆர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரோம்பட் காவல் நிலையத்திற்கு ஜூன் 13ஆம் தேதி மட்டுமே மாற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய 21 வயது இளம்பெண்ணின் உறவினர் ஒருவர், மே 5 ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரண்டு உடல்களின் புகைப்படங்களை போலீசார் அவர்களுக்கு அனுப்பியதாகவும், குடும்பத்தினர் அவர்களை அடையாளம் கண்டதாகவும் கூறினார்.
"எங்களுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை கூட வரவில்லை," என்று உறவினர் கூறினார்.
வைரல் வீடியோவின் சம்பவத்துடன், ஜூன் 12 அன்று இரண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் வட அமெரிக்க மணிப்பூர் பழங்குடியினர் சங்கம், தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரில் இந்த குறிப்பிட்ட வழக்கும் அடங்கும்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இம்பாலில் ஒரே கார் கழுவும் கடையில் வேலை செய்தனர், அவர்கள் நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த மாதம் அவர்களது குடும்பத்தினருடன் பேசியபோது, பல உடல்கள் ஏன் மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் உள்ளன என்பதைப் பற்றி செய்தி வெளியிட்டது.
அப்போது, 21 வயதான இளம்பெண்ணின் தாய், மே 5 ஆம் தேதி மாலை தனது மகளுக்கு போன் செய்தபோது, அழைப்பை எடுத்த ஒரு பெண் மணிப்பூரி மொழியில் பேசி மிரட்டினார். மீண்டும் அழைக்க முயன்றபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது, என்றார்…
வெள்ளிக்கிழமை அன்று, மாலை என்ன நடந்தது என்பது குறித்த பெரும்பாலான தகவல்கள், சக ஊழியர் நாகா மூலம் கிடைத்ததாக உறவினர் கூறினார். இந்த இரண்டு பெண்களுடன் அவரும் ஒன்றாக தங்கியிருந்தார்.
‘அங்கு வந்த ஒரு கும்பல், இங்கு இரண்டு குக்கிப் பெண்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்லுமாறு மிரட்டியுள்ளனர். பயத்தில், அங்கு தங்கியிருந்த மற்றொரு நபர் அவர்களின் அறையை நோக்கி காட்டி உள்ளார்.
அவர்களை பிடித்து வெளியே இழுத்து சென்றனர். அந்த பெண்களை கொடுமைப்படுத்தி, அவர்களின் வாயில் துணியைப் போட்டு, ஒரு ஹாலுக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டினர்.
இரவு 7.10 மணி வரை உள்ளே இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு, மற்றவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு பெண்களும் உயிருடன் இல்லை. என் உறவினரின் நீளமான முடியும் வெட்டப்பட்டது, என்று அவர் குற்றம் சாட்டினார்.
சைகுல் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வைரலான வீடியோ மற்றும் குறிப்பிட்ட இந்த இரண்டு நிகழ்வுகளிலும்- வயர்லெஸ் மூலம் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அன்றே தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் மாநிலத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வழக்குகள் மிகவும் தாமதமாக மாற்றப்பட்டன.
சூழ்நிலை காரணமாக, மற்ற சமூகத்தினரின் பகுதிகளுக்கு போலீசார் கூட பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. அதனால்தான் எங்கள் காவல் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் பள்ளத்தாக்குக்குச் செல்ல முடியவில்லை, அவர்களின் பணியாளர்கள் இங்கு வர முடியவில்லை, என்று அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.