மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்டி சமூகத்தைச் சேர்ந்த ஆண் கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்து தெருவில் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையை உலுக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குக்கி- மெய்டி பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
மணிப்பூர் கலவர பூமியாக உள்ளது. இந்த கலவரத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் பெண்களை நிர்வாணப்படுத்து இழுத்துச் சென்ற சம்பவம் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 4-ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் நேற்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர் மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று (ஜூலை 20) மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரை நேரடியாக அழைத்து மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக தங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தது. அதோடு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிறிது அவகாசம் தருவதாகவும், நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் வெங்கடரமணி மற்றும் மேத்தா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் கூறியது.
விசாரணை தொடங்கியவுடன், தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கொடுமை, நேற்று வெளியான வீடியோக்களால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நீதிமன்றமாக எங்களின் மிக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
அரசாங்கம் உண்மையில் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலின வன்முறையைத் தூண்டும் வகுப்புவாத கலவரத்தில் பெண்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஆழமாகவும், ஆழமாகவும், கவலையளிப்பதாகவும், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார்.
தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் எஸ்.ஜி. மேத்தா கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் அரசும் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று அவர் கூறினார். வீடியோ வெளியானதும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளதாகவும், அதன் முடிவு நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, மணிப்பூர் வன்முறை தொடர்பாக குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வீடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் ஹேராதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“