டெல்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஊழல் குற்றசாட்டில் சத்யேந்திர ஜெயின் சிறையில் உள்ளார்.
இதையும் படியுங்கள்: ’மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்’: மணீஷ் சிசோடியாவின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இந்தநிலையில், டெல்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்கள் துணைநிலை ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து அவை ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக தனது கைதை எதிர்த்து மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதில் தலையிட மறுத்தது. இதனையடுத்து, ராஜினாமாக்கள் நடந்துள்ளன. உச்ச நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவிடம் "மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது. இதன் பொருள் அவர் முதலில் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சி.பி.ஐ) கைது செய்யப்பட்டதை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா தற்போது 5 நாள் சி.பி.ஐ காவலில் உள்ளார். "முறையான மற்றும் நியாயமான விசாரணைக்காக" அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு "உண்மையான மற்றும் முறையான" பதில்களைப் பெற ஏஜென்சியை அனுமதிப்பதற்காக என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது.
பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை முதல், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி டெல்லி அரசாங்கத்தின் மீது படிப்படியாக அழுத்தம் கொடுத்து, சத்யேந்திர ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா குறித்து டெல்லி பா.ஜ.க செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், "இறுதியாக, பா.ஜ.க.,வின் போராட்டம் பலனளித்துள்ளது; பல மாதங்களாக, சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா சிறைக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அதே போல் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வந்தோம். இன்று, அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டியதாயிற்று. இது பா.ஜ.க.,வுக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி. இன்று, கலால் ஊழலை ஆதரிப்பவரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் போராட்டம் ஓயவில்லை, அரவிந்த் கெஜ்ரிவால், நீங்களும் பதவி விலக வேண்டும், உங்கள் மூக்குக்குக் கீழே உங்கள் சம்மதத்துடன் மதுபான ஊழல் வெளிப்பட்டது, அதற்கு நீங்களே பொறுப்பு. உங்கள் ராஜினாமாவைக் கோரும் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.
தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை வழக்கில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முன்னாள் கலால் துறை அதிகாரிகள் உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், டெல்லி அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. மணிஷ் சிசோடியா வசம் உள்ள அமைச்சர்கள் கைலாஷ் கஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் இலாகாக்களை பொறுப்பேற்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil