/indian-express-tamil/media/media_files/2025/02/09/jGF83UfM1FncRmhNu8th.jpg)
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் (பிப் 8) வெளியானது. இதில் 13 தொகுதிகளில் கடும் போட்டி நிலவிய நிலையில், 9 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இவற்றில் வாக்கு வித்தியாசம் சுமார் 5 ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Manish Sisodia to Arvind Kejriwal, AAP lost 9 tight fights to BJP, won four
சங்கம் விஹாரில் பா.ஜ.க வேட்பாளர் சந்தன் சவுத்ரி, 344 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏற்கனவே அத்தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த தினேஷ் மொஹானியா தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ் சவுத்ரி 15,863 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நோட்டாவிற்கு 537 வாக்குகள் கிடைத்தது. இது வெற்றி வித்தியாசத்திற்கான வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிலோக்புரியில், ஆம் ஆத்மி கட்சியின் அஞ்சனா பார்ச்சாவை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க-வின் ரவிகாந்த் 392 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸின் அமர்தீப் 6,147 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) மற்றும் பி.எஸ்.பி ஆகியவை முறையே 1,681 மற்றும் 1,322 வாக்குகள் பெற்றன.
ஆம் ஆத்மியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் பறித்ததாக தெரிகிறது. அவர் பா.ஜ.க-வின் தர்விந்தர் சிங் மர்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரஸின் ஃபர்ஹாத் சூரி 7,350 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
முன்னாள் அமைச்சரான சௌரப் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மெஹ்ராலியில், பா.ஜ.க 1,782 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மியை தோற்கடித்தது. சுயேச்சை வேட்பாளர் பால்யோகி பாபா பாலக்நாத் 9,731 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு புது டெல்லி தொகுதியில் இருந்து வந்தது. அங்கு அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க-வின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரஸின் சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகள் பெற்றார்.
மாளவியா நகர் மற்றும் ராஜிந்தர் நகர் ஆகிய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் முறையே 2,131 மற்றும் 1,231 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்தனர்.
மறுபுறம், டெல்லி கான்ட், கல்காஜி, அம்பேத்கர் நகர் மற்றும் படேல் நகர் ஆகிய நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சி 5,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
டெல்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வீரேந்தர் சிங் காடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வர் அதிஷி வெறும் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் கல்காஜி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
அம்பேத்கர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் அஜய் தத் 4,230 வாக்குகள் வித்தியாசத்திலும், படேல் நகரில் 4,654 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி இருந்தது.
2020 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி 5,000 க்கும் குறைவான வித்தியாசத்தில் ஏழு இடங்களை வென்றது, ஆனால் இந்த முறை, அந்த அனைத்து இடங்களையும் பா.ஜ.க-விடம் இழந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.