Advertisment

'தற்செயல் பிரதமர்' என்ற விமர்சனம்; செயல்கள் மூலம் பதிலடி கொடுத்த மன்மோகன் சிங்

கடந்த ஆண்டு மன்மோகன் சிங்குடன் நான் நடத்திய உரையாடலில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையே எழுந்துள்ள 'கசப்பு' உணர்வு அவரை கவலையடையச் செய்தது தெரிய வந்தது. இது ஜனநாயகத்திற்கு 'நல்லதல்ல' என அவர் உணர்ந்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Manmohan (1)

"என் பிரதமர் பதவிக் காலத்தை குறித்து நான் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை" என கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மன்மோகன் சிங்கை நான் சந்தித்த போது அவர் கூறினார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Manmohan Singh: The ‘accidental PM’ who proved, time and again, that he was no accident

 

Advertisment
Advertisement

கடந்த 2014-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் இரண்டாவது பிரதமர் பதவி காலத்தின் போது, "ஊடகங்களை விட வரலாறு என் மீது கருணை கொள்ளும்" என அவர் தெரிவித்தார். முன்னதாக, "பலவீனமான பிரதமர்" என்ற குற்றச்சாட்டுக்கு மன்மோகன் சிங் ஆளானார். அவரது பதவி காலத்தின் போது, சோனியா காந்தியே அவரை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது.

33 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். நேருவிற்கு பின்னர், தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங் தான். இந்த ஆண்டு மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு வரை, இது சாத்தியம் என மக்கள் நம்பியிருக்க மாட்டார்கள். தனது மென்மையான பேச்சு மற்றும் எச்சரிக்கை உணர்வுக்காக மன்மோகன் சிங் மீது பல விமர்சனங்கள் சுமத்தப்பட்டன. 

மன்மோகன் சிங்கின் நீண்ட அரசியல் பயணத்தில், 1999 இல் தெற்கு டெல்லியில் இருந்து ஒரே ஒரு முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெயரை மன்மோகன் சிங் பெறுவதை தடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் பணியாற்றியதாக கூறப்பட்டது. அதன் பின்னர், லோக்சபாவிற்கு போட்டியிட மன்மோகன் சிங் முயற்சிக்கவில்லை.

அவர் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றதால், சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக முதல் முறையாக மேல்-சபைக்குள் நுழைந்தார்.

கடந்த ஆண்டு மன்மோகன் சிங்குடன் நான் நடத்திய உரையாடலில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையே எழுந்துள்ள 'கசப்பு' உணர்வு அவரை கவலையடையச் செய்தது தெரிய வந்தது. இது ஜனநாயகத்திற்கு 'நல்லதல்ல' என அவர் உணர்ந்திருந்தார்.

தாழ்மையான தொடக்கத்திலிருந்து அதிகாரத்தின் உச்சத்திற்கு மன்மோகன் சிங் உயர்ந்தது என்பது சுயமாக உருவான மனிதனின் கதை; மேற்கு பஞ்சாபில் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பின்தங்கிய கிராமமான காவில், பள்ளி, சுகாதார வசதிகள், மின்சாரம் எதுவும் இல்லாத சூழலில் மன்மோகன் சிங் பிறந்தார். உருது-நடுத்தரப் பள்ளிக்குச் செல்ல மைல்கள் நடந்து சென்று, மண்ணெண்ணெய் விளக்கின் கீழ் மன்மோகன் சிங் படிப்பார். அந்த நேரத்தில் இருந்த ஏழை மாணவர்களுக்கான "உதவித்தொகை முறை" தான் அவரது உயர்வுக்கு காரணம் என்று அவர் கூறினார்.

தலைமைப் பொருளாதார ஆலோசகர்,  இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதிச் செயலர் மற்றும் யுஜிசி தலைவர் என பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். மன்மோகன் சிங் அளவிற்கு பொதுவாழ்வில் அனுபவத்தை பெற்றவர்கள் சிலரே.

கடந்த 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், யுபிஏ தலைவராகவும் அவர் பதவி வகித்தார். ஆனால், பிரதமராக பதவியேற்க அவர் மறுத்து விட்டார்.

அரசியல் ரீதியான முடிவுகளை சோனியா காந்தி எடுத்தார். ஆட்சி ரீதியான முடிவுகளை மன்மோகன் சிங் எடுத்தார். வெகு விரைவில் அதிகாரத்தின் மையமாக சோனியா காந்தி காணப்பட்டார். 

மன்மோகன் சிங் புயலிலும் வளைந்து கொடுக்கும் நாணல் போல் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்ததாகவும் சிலர் கூறுவார்கள். அப்போதைய சூழலில் பெரும்பாலான அமைச்சர்கள் கூட்டம் மூத்த தலைவரான பிரனாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. மன்மோகன் சிங், அரசை மட்டுமே நிர்வகித்தார். பிரதமராவதற்கு முன்பு பிரனாப் முகர்ஜியை சார் என்று மன்மோகன் சிங் அழைத்தார். அதற்கு பின்பும் சில நேரங்களில் சார் என அழைத்ததற்கு, அவ்வாறு சொல்ல வேண்டாம் என பிரனாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்ற பின்னர், சோனியா காந்தியை நாடாளுமன்றத்தில் எங்கே அமர வைப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்த முறையும் பிரனாப் முகர்ஜியே இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டார். முன் வரிசையில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது.

எந்தத் தடைகள் வந்தாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் (2008 இல்), அவர் அடிபணியாமல் இருந்தார். இது அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய உறவுக்கு வழிவகுத்தது. மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோர் உறவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பரஸ்பரம் இருந்தது

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த சிற்பியாக மன்மோகன் சிங் விளங்கினார். மேலும், முதல் சீக்கிய பிரதமராக அவர் விளங்கினார். அவருக்கென தனிப்பட்ட திட்டங்களோ அல்லது தொகுதியோ இல்லை என்பது நிதர்சனம்.

தனது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் கூட, மன்மோகன் சிங் விழிப்புடன் இருந்தார். கட்சியை குறித்து அவர் எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை. 

குறிப்பாக, மன்மோகன் சிங் அரசு இயற்றிய அவசர சட்டத்தை ராகுல் காந்தி கிழித்து எறிந்தபோது, அவர் ஏன் பதவி விலகவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ராகுல் காந்தி தன்னை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக மன்மோகன் சிங் கூறினார். 

இன்று அவரது மறைவிற்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது. அவரது கண்ணியமான அரசியல் நடத்தைக்காக நினைவுகூறப்படுவார். சிறுபான்மை சமூகத்தில் இருந்து வந்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டார்.

- Neerja Chowdhury

Manmohan Singh Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment